கர்ப்பம் ஆகாத பெண்ணுக்கு, கர்ப்பம் ஆனதாக கூறி மருத்துவம் - போலி மருத்துவ பரிசோதனை கூடம் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.!


காயல்பட்டினத்தில் – DOORMED DIAGNOSTICS என்ற பெயரில், ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை கூடம் இயங்கிவருகிறது. இதற்கு - உடன்குடியில் ஒரு கிளை உள்ளது.

இந்த மருத்துவக்கூடத்தில், கர்ப்பம் ஆக மருத்துவம் எடுத்துவந்த ஒரு பெண்மணி, தான்  கர்ப்பம் ஆகியுள்ளதை உறுதி செய்ய, தொடர்ந்து ஏழு வாரங்கள் பரிசோதனை செய்துள்ளார். 

ஏழு வாரங்களும், கர்ப்பம் ஆகியுள்ளதாக உறுதி செய்யும் முடிவுகளை இந்த மருத்துவ பரிசோதனைக்கூடம் - போலியாக வழங்கியுள்ளது.  அதன் அடிப்படையில் -  ஏறத்தாழ இரண்டு மாதங்களாக, அந்த பெண்மணியும், மாத்திரையும், ஊசியும் எடுத்து வந்துள்ளார்.  ஆனால் அந்த பெண்மணி உண்மையில்  கர்ப்பம் ஆகவில்லை.

அந்த மருத்துவக்கூடம் வழங்கிய முடிவுகள் போலியானது என மற்றொரு மருத்துவக்கூடத்தில் செய்த சோதனை உறுதி செய்யவே, அந்த பெண்மணியின் குடும்பத்தினர் - அந்த பரிசோதனை கூடம் நடத்தும் கோகுல் என்பவரை தொடர்புக்கொண்டு போது, தவறு நடந்துள்ளதை ஒப்புக்கொண்ட அவர், மாதிரிகளை - தூத்துக்குடியில்  உள்ள ஒரு தனியார் கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததாக கூறினார். அந்த தனியார் கூடம் விபரங்களை வழங்கவில்லை.

நகரில் இது போல பல பரிசோதனைக்கூடங்கள் இயங்குகின்றன. இவைகள் முறையான அனுமதிபெற்று இயங்குகிறதா, பரிசோதனைக்காக தரமான  சாதனங்கள் வைத்துள்ளார்களா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

நகரில் உள்ள பரிசோதனைக்கூடங்கள் அனைத்தையும் அரசின்  சுகாதாரத்துறை ஆய்வு செய்து, உரிமம் மற்றும் அவசியமான சாதனங்கள் இல்லாமல் செயல்படும் கூடங்கள் அனைத்து மீதும் நடவடிக்கை எடுத்து, மூடிட வேண்டும் என்றும், 

இந்த பரிசோதனைக்கூடங்கள் இயங்கிட தெளிவான வழிமுறைகளை வெளியிடவேண்டும் என்றும் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில் ராஜிடம் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) காயல்பட்டினம். தூத்துக்குடி மாவட்டம் (அரசு பதிவு எண் 75/2016) அலைபேசி எண்+91 7397 468 321

Previous Post Next Post