மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் - மின்சார வாரியம் தகவல்.!

 

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் அளிப்பதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மின்சாரத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மின்நுகர்வோர் ஆதார் எண்ணை இணைக்க காலதாமதம் ஏற்படுவதாலும், கட்டணம் செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டும், மின்நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக வருவாய்ப் பிரிவு தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் கே.மலர்விழி, அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதை சரிபார்த்த பிறகே இணையவழியிலும், நேரடியாகவும் மின் கட்டணத்தை வசூலிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, மின் கட்டணம் செலுத்துவதற்கு, நவ. 24 முதல் நவ.30ம் தேதி வரை இறுதிநாள் உள்ள மின் நுகர்வோர் அனைவருக்கும் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும்.

குறிப்பாக, ஒரு நுகர்வோருக்கு நவ.28ம் தேதி மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் என்றால், அவருக்கு நவ.30 வரை அவகாசம் வழங்க வேண்டும். அதேபோல், ஆதார் இணைக்காமல் உள்ள நுகர்வோருக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும். இது தொடர்பான தகவல்களை, மின் கட்டண வசூல் மையங்கள் வாயிலாக நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post