கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு மாணவனுக்கு பிறப்புறுப்பை நசுக்கி பாலியல் தொல்லை - 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெறிச்செயல் - தந்தை காவல் நிலையத்தில் புகார்.!

 


சென்னை கே.கே.நகரில் உள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவர்கள் பாலியல் கொடுமை செய்து, பிறப்புறுப்பை நசுக்கி தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவன் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 21ம் தேதி எம்ஜிஆர் நகரை சேர்ந்த பவுன் ராஜ் என்பவர் கே.கே.நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார் அதில்,

எனது மகன் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த மாதம் உடன் படிக்கும் மாணவனுடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் சக மாணவர்கள் எனது மகனை அடித்துள்ளனர். இதுகுறித்து நான் பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகம் மற்றும் வகுப்பு ஆசிரியரிடம் புகார் அளித்தேன். சம்பந்தப்பட்ட மாணவர்களை அவர்கள் நேரில் அழைத்து எச்சரித்தனர். அதன் பிறகு எனது மகனை, கடந்த 21ம் தேதி பள்ளிக்கு செல்ல அனுமதித்தேன். பிறகு பள்ளி முடிந்தவுடன் எனது மகனை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்து ‘எங்களை பற்றி ஆசிரியரிடம் புகார் அளிக்கிறாயா’ என்று கூறி, எனது மகனின் பிறப்புறுப்பை கைகளால் கசக்கியும் வயிற்றில் எட்டி உதைத்தும் உள்ளனர். எனது மகன் வாயில் அசிங்கமான செயலை செய்து அவனை துன்புறுத்தியுள்ளனர்.

இதில் எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எனவே எனது மகனை தாக்கி பிறப்புறுப்பை நசுக்கிய சக மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்மீது போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து கமிஷனர் உத்தரவுப்படி வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன் நேற்று கே.கே.நரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையின்போது பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்களிடம் ராகிங் செய்த மாணவர்கள் மீது பள்ளி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த புகாரின் மீது எந்த மாதிரியான நடவடிக்கை பள்ளி நிர்வாகம் எடுத்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையை அறிக்கையாக உதவி கமிஷனர் பாலமுருகன் பதிவு செய்து கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவனை ராகிங் செய்து தாக்கிய 10 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post