திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் சேவையாற்ற திருப்பூர் தன்னார்வலர்களுக்கு அழைப்பு

 திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம்பாலிப்பு திருப்பணிக்குழு செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:

டிசம்வர் 6 ஆம் தேதி திருவண்ணாமலை, அருள்மிகு ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்குகிறது.  எமது "திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்பு திருப்பணிக்குழு" சார்பில் 40-வது ஆண்டாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும், அங்குள்ள 18 திருமண மண்டபங்களில், கடந்த 39 ஆண்டுகளாக எமது திருப்பணிக்குழு சார்பில், சுமார் 90 இலட்சம் மதிப்பீட்டில் இச்சேவை செயல்பட்டு வருகிறது. நமது திருப்பூர் மாவட்ட பக்தர்களின் பங்களிப்பாக ஆண்டுதோறும் சுமார் 5 டன் காய்கறிகள், 30 இலட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் நன்கொடையாகப் பெறப்பட்டு இச்சேவா காரியத்திற்காக தொடர்ந்து அனுப்பப்படுகிறது. மேலும் சுமார் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் திருப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்டு திருவண்ணாமலையில் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் தன்னார்வமாக கலந்துகொண்டு, அன்னதானப்பணிகளில் சேவையாற்ற, இந்தாண்டும் சேவார்த்திகள் வேண்டப்படுகிறார்கள். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு மளிகைப்பொருட்கள் கொடுக்க விரும்புவோர், திருப்பணிக்குழுவின் இணைச்செயலாளர் முருகேசன் & பொருளாளர் மோகன சுந்தரம் ஆகியோர்களை 94434 79279, 93616 26363 ஆகிய எண்களைத் தொடர்புகொள்ள அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.
Previous Post Next Post