குற்றாலம் பகுதியில் செயற்கை அருவிகள் உருவாக்கிய தனியார் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும்.! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

செயற்கை அருவிகள் இருக்கும் தனியார் ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும்” என 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த வினோத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி, ஐந்தருவி செண்பகாதேவி அருவி, புலியருவி, சிற்றருவி , பழத்தோட்ட அருவி ஆகியன இயற்கையான அருவிகளாகும். சீசன் காலங்களில் குற்றால அருவிகளில் குளிக்க தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் அதிகளவில் வருவது வழக்கம்.

இதையடுத்து வணிக ரீதியில் மக்களை ஈர்க்க குற்றாலம் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கையாக அருவிகளை உருவாக்கி இணையதளங்களில் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். அவர்கள் இயற்கையான அருவிகளின் நீர்வழிப் பாதையை மாற்றி செயற்கையான அருவிகளுக்கு தண்ணீர் கொண்டுச் செல்கின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. எனவே, குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை அருவிகளை உருவாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், செயற்கை அருவிகளின் புகைப்படங்கள், இணையதள முகவரிகள் நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவு: "இயற்கை அருவிகளின், நீரோட்டத்தை மாற்றி செயற்கையாக அருவிகளை உருவாக்குவது முற்றிலும் சட்டவிரோதமானது. இது தொடர்பாக தென்காசி, நெல்லை, குமரி, கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இக்குழு தனியார் ரிசார்ட்டுகளில் வணிக நோக்கத்தில் செயற்கையாக அருவிகள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். செயற்கை அருவிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் ரிசார்ட் நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்க வேண்டும். இக்குழு செயற்கை அருவிகள் தொடர்பாக ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post