திருப்பூரில் பள்ளி மாணவிக்கு டெங்கு காய்ச்சல்

திருப்பூர் நெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அழகு மீனாட்சி (வயது 9) டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூரில் அண்மையில் பெய்த பருவமழை காரணமாக தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வைரல் காய்ச்சல் மற்றும் புளூ காய்ச்சல் பாதிப்பு பெருமளவு பதிவாகி உள்ளது. அதேசமயம் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர். எனினும் இதுவரை மாநகராட்சி நிர்வாகமோ, சுகாதாரத் துறையோ டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை.

திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் நெசவாளர் காலனி பகுதியில் செகண்ட்ஸ் குடோனில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அழகு மீனாட்சி, திருப்பூர் பி.என்.சாலை நெசவாளர் காலனி மாநகராட்சிப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் விடவில்லை. இதையடுத்து 

தனியார் மருத்துவமனையில் அழகு மீனாட்சிக்கு புதன்கிழமை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். எனினும் அவரது பெற்றோர், தங்கள் சொந்த ஊர் உள்ள மதுரை மாவட்டத்திற்கு மாணவியை அழைத்துச் சென்று திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக மாணவி அழகு மீனாட்சியின் தந்தை பாண்டியன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நெசவாளர் காலனி பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில் இரண்டு, மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அவையும் சுத்தமாக பராமரிக்கப்படாத நிலை உள்ளது. அப்பகுதியைச் சுற்றிலும் சுகாதாரமற்ற நிலை உள்ளது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து நோய் பரவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Previous Post Next Post