ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு

 ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்து வருகிறது.


தமிழ்நாட்டில் முக்கிய ரயில் பாதை பிரிவுகளில் பயணிகள் ரயில்களை அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் இயக்க தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரயில் பாதைகளை பலப்படுத்துதல், நவீன மின்மயம், ரயில் இயக்க சைகை விளக்குகள் மற்றும் கம்பங்களை மேம்படுத்துதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ரயில்களின் வேகத்தை ரயில்வே வழிகாட்டு கையேடுகளில் குறிப்பிட்டுள்ளபடி முறையே மணிக்கு 160 கிமீ மற்றும் 130 கிமீ என அதிகரிக்க முடியும்.


சென்னை - ரேணிகுண்டா பிரிவு


134.78 கிமீ தூரமுள்ள தங்க நாற்கர பாதையான சென்னை - ரேணிகுண்டா பிரிவில் ரயில்களின் வேகம் ஏற்கனவே மணிக்கு 110 கிமீ லிருந்து 130 கிமீ என அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதிக்கு பிறகு இந்த பிரிவில் நடப்பு ஆண்டில் ரயில்களின் வேகத்தை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உரிய அனுமதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் உள்ள இந்த ரயில் பாதையில் ரயில்களை அதிவேகத்தில் இயக்குவதன் மூலம் பயணிகளின் பயண நேரம் வெகுவாக குறையும்.


மற்ற 'பி' பிரிவு ரயில் பாதைகள்


மற்ற 'பி' பிரிவு ரயில் பாதைகளான அரக்கோணம் - ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை - போத்தனூர் மற்றும் சென்னை - திண்டுக்கல் ஆகிய பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரிவுகளில் தற்போதைய வேகமான மணிக்கு 110 கிமீ - ல் இருந்து அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகமான மணிக்கு 130 கிமீ என அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக வந்தே பாரத், சதாப்தி ரயில்கள் இயக்கப்படும் 144.54 கிமீ தூரம் உள்ள அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பாட்டு பணிகளை முடித்து ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


மணிக்கு 110 கிமீ வேகம் அதிகரிப்பு


இந்த 2022 - 23 ஆம் நிதியாண்டில் இதுவரை விருத்தாச்சலம் - சேலம், தஞ்சாவூர் - பொன்மலை, விழுப்புரம் - காட்பாடி, நாகர்கோவில் - திருநெல்வேலி விழுப்புரம் - புதுச்சேரி, தஞ்சாவூர் - காரைக்கால், கோயம்புத்தூர் வடக்கு - மேட்டுப்பாளையம் ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 80, 100, 50-80, 100, 100, 50-90, 90 கிமீ -ல் இருந்து 110 கிமீ -க்கு அதிகரிக்க ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. மேலும் இந்த நிதியாண்டில் அரக்கோணம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - திருச்செந்தூர், தாம்பரம் - செங்கல்பட்டு, திருநெல்வேலி - தென்காசி, சேலம் - கரூர் - நாமக்கல், கடலூர் துறைமுகம் - விருத்தாச்சலம், திண்டுக்கல் - பொள்ளாச்சி, மதுரை - வாஞ்சி மணியாச்சி ஆகிய பிரிவுகளில் தற்போதைய வேகமான முறையே மணிக்கு 75/90, 70, 100, 70, 100, 60/75, 100, 100 கிமீ -ல் இருந்து 110 கிமீ -க்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


வேகத்தை அதிகரிக்க செய்ய வேண்டிய பணிகள்


ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில் பாதை அமைப்புகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டி உள்ளது. அவற்றில் ரயில் பாதைகளை முழுமையாக மாற்றி அமைப்பது, தேவையான இடங்களில் 60 கிலோ கிராம் எடை கொண்ட தண்டவாளங்கள் அமைப்பது, பாலங்களை பலப்படுத்துவது, வளைவுகளை நேர்படுத்துவது, ரயில் பாதைகளில் பொதுமக்கள் கடக்கும் அனுமதி இல்லாத இடங்களில் பொதுமக்கள் கடப்பதை தடுக்க சுவர்கள் கட்டுவது, சைகை விளக்குகளை தானியங்கி விளக்குகளாக மேம்படுத்துவது, வேகத்திற்கு தடை ஏற்படுத்தும் மின்மய அமைப்புகளை மாற்றி அமைப்பது ஆகியவை முக்கிய பணிகளாகும்.


சென்னை - கூடூர் பிரிவு


134.3 கிமீ தூரம் உள்ள சென்னை - கூடூர் பிரிவு தங்க நாற்கர 'ஏ' பிரிவு பாதையாகும். இந்த பிரிவில் கடந்த அக்டோபர் 5 முதல் ரயில்கள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்க அனைத்து தகுதிகளும் உள்ள முதல் ரயில் பாதை பிரிவு சென்னை - கூடுர் ஆகும். இந்த பிரிவில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் முன்பு ரயில் பாதைகளின் பலம், மின்மய அமைப்புகள், சைகை விளக்குகள், ரயில் பெட்டிகள் ஆகியவற்றின் திறனை சோதிக்க ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்புடன இணைந்து தெற்கு ரயில்வே பல்வேறு ரயில் சோதனை ஓட்டங்கள் நடத்தியது. அனைத்து சோதனைகளிலும் வெற்றி கிடைத்தவுடன் தற்போது இந்த பிரிவில் ரயில்கள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படுகின்றன.


விரிவான திட்ட அறிக்கை


சென்னை பெங்களூர் ரயில் வழித்தடத்தில் ரயில்களை மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்க விரிவான திட்ட அறிக்கையை தெற்கு ரயில்வே ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி உள்ளது. அதேபோல சென்னை - கூடூர், சென்னை - ரேணிகுண்டா ஆகிய பிரிவுகளில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிமீ -க்கு அதிகரிக்க சம்பந்தப்பட்ட ரயில்வேக்களும் பிரிவான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து உள்ளன. 

இந்திய ரயில்வேயில் எட்டு வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை மணிக்கு 160 கிமீ -க்கு அதிகரிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. பல்வேறு ரயில்வே மண்டலங்கள் பல்வேறு பிரிவுகளுக்கு விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 362 கிமீ தூர சென்னை பெங்களூர் பிரிவுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தெற்கு ரயில்வே தேர்வு செய்யப்பட்டிருந்தது.

Previous Post Next Post