தூத்துக்குடியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு : டிச.10ம் தேதி துவங்குகிறது!

 

தூத்துக்குடியில் வருகிற 10 மற்றும் 11ம் தேதிகளில் 30ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது என என்சிஎஸ்சி கெளரவ தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து என்சிஎஸ்சி கெளரவ தலைவர் மற்றும் அரசு கலைக் கல்லூரி முதல்வர் பேராசிரியை இரா. சாந்தகுமாரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது "மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை (DEPARTMENT OF SCIENCE & TECHNOLOGY), தேசிய அறிவியல் தொழில் நுட்ப பரிமாற்றக் குழுவுடன் (National Council for Science & Technology Communication) இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தி வருகிறது. 

இவ்வாண்டு "ஆரோக்கியம் மற்றும் நலவாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்துகொள்வது" என்ற தலைப்பில் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு வருகிற 2022 டிசம்பர் 10 & 11 தேதிகளில் தூத்துக்குடி புனித அன்னை தெரேசா பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் 10 முதல் 17 வயது வரையிலுள்ள மாணவர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் இருந்து மாவட்ட அளவில் தேர்வு செய்து 550ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க உள்ளனர். சுமார் 1000குழந்தை விஞ்ஞானிகள், 500வழிகாட்டி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், என 1500பேர் கலந்து கொள்ளவுள்ளனர். 

இதன் மாநில மாநாடு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைக்கவுள்ளார். 

இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன், சசிகுமார், பூச்சியியல் விஞ்ஞானி எஸ்.தினகரன், மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சுப்ரமணி, மனோன்மணி சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.அண்ணாத்துரை, எழுத்தாளர் விழியன், புனித அன்னை தெரேசா பொறியியல் கல்லூரியின் இயக்குநர் பேரா எ.ஜார்ஜ் கிளிங்டன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், கல்வித்துறை இயக்குநர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இம்மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல், விஞ்ஞானிகளுடன் குழந்தைகள் கலந்துரையாடல், ஆசிரியர்களுக்கு சிறப்பு அமர்வு, எளிய அறிவியல் பரிசோதனை, கணக்குப் இனிக்கும், எழுத்தாளர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநர் சுதன் இணைய வழியாக பங்கேற்று உரையாற்றவுள்ளார். பங்கேற்கும் 550ஆய்வுக் கட்டுரைகளில் சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்து டிசம்பர் 26 முதல் 30முதல் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வறிக்கை சமர்பிக்கவுள்ளனர்.

மாநில மாநாட்டை அரசு கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் பேராசிரியர் இரா.சாந்தகுமாரி, மாநிலச் செயலாளர்கள் எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.எஸ். ஸ்டீபன்நாதன், எம்.தியாகராஜன், மாவட்ட செயலாளர் பேரா சுரேஷ் பாண்டி ஆகியோர் ஒருங்கிணைத்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.  பேட்டியின் போது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post