பழனியில் அடிவாரம், படிப்பாதை கோவில்களில் கும்பாபிஷேகம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு

பழனி முருகன் கோயில் மலைஅடிவாரம், படிபாதை கோயில்களில் குடமுழுக்கு. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாக நடைபெறுகிறது. 

இன்றைய தினம் கிரிவீதியில் உள்ள ஐந்து மயில்கள் மற்றும் அருள்மிகு பாத விநாயகர், அருள்மிகு சேத்ரபாலர், அருள்மிகு சண்டிகாதேவி முதல்  படிப்பாதை மண்டப அருள்மிகு விநாயகர்கள், அருள்மிகு இடும்பன், அருள்மிகு கடம்பன், அருள்மிகு குராவடிவேலர், அருள்மிகு அகஸ்தியர், அருள்மிகு சிவகிரீஸ்வரர், அருள்தரும் வள்ளிநாயகி, அருள்மிகு கும்மினி வேலாயுதசுவாமி முதலான பத்திற்க்கும் மேற்பட்ட உபதெய்வ சன்னதிகளில்  திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

முன்னதாக மலைமீது அமைக்கப்பட்டுள்ள 90 யாகசாலைகளில்   சிவாச்சார்யார்கள் தீ வளர்த்து  விதை, வேர், இலை, தண்டு, பூ, காய், கனி, கிழங்கு, வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். ஓதுவார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பன்னிமுறு திருமுறை விண்ணப்பம், கந்தர் அலங்காரம், திருபுகழ், முருகன் பிள்ளை தமிழ் என தமிழ் கடவுள் முருகனை போற்றி பாடிட தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடைபெற்றது.


 முன்னதாக  கங்கை, காவிரி, சண்முகநதி என நாடு முழுவதிலும் உள்ள புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.


 பின்னர் வேத மந்திரங்கள் முழங்க படிபாதையில் உள்ள சன்னதிகளில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


நாளை 27 ம் தேதி மலைமீதுள்ள ராஜகோபுரம்,  தங்க கோபுரம் என மலைமீது தண்டாயுதபாணி சுவாமி சன்னதியை சுற்றியுள்ள கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. மலைமீது காலை 8:15. மணிக்கு மேல் 9:15 வரை குடமுழுக்கு நடைபெறும் .அப்போது 6000 பக்தர்கள் நேரடியாக கலந்துகொண்டு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


குடமுழுக்கு விழா முடிந்து மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு மகாதீபாராதணை நடைபெற பிறகு வழக்கம் போல பக்தர்கள் அனைவரும் மலைமீது சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். குடமுழுக்கு நாளில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் போதிய ஏற்ப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் கோயில் நிர்வாமும் செய்துள்ளது.


 பாதுகாப்பு பணியில் தென்மண்டல ஐஜி அஸ்லாக்கார்க் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குடமுழுக்கு முடிந்த பிறகு ராஜகோபுரம் மற்றும் மலையை சுற்றி ஹெலிக்காப்ட்டரில் மலர் தூவிட ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல பக்தர் மீது குடமுழுக்கு முடிந்து புனித தீர்த்தம் தெளிக்க எட்டு இடங்களில் தண்ணீர் தெளிக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. 


மேலும் குடமுழுக்கு விழாவை பக்தர் மலை அடிவாரத்தில் இருந்து பார்க்கும் வகையில்  கிரிவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட 16 இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளும் இரண்டு இலட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி,  சக்கரபாணி உள்ளிட்ட பலரும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் என முக்கிய அரசு துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்கின்றனர்.

- பழனி ரியாஸ்

Previous Post Next Post