நிதி நிறுவனத்தில் கடன் மோசடி: குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் ரூ.60 லட்சம் திரும்ப ஒப்படைப்பு - எஸ்பி பாராட்டு!!

தூத்துக்குடியில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கடனாக பெற்ற பணத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த வழக்கில் குற்றப்பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் ரூ. 60 லட்சம் பைனான்ஸ் நிறுவனத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை : சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சிவசங்கர் (56) என்பவரும், அவரது மனைவி வாசுகி ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தங்களது அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வினியோக நிறுவன அபிவிருத்திக்காக தூத்துக்குடி எட்டயாபுரம் ரோட்டில் உள்ள ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து 30.05.2018 தேதியிட்ட மேற்படி காசோலை மூலம் ரூ. 40 லட்சமும், 21.07.2018ம் தேதியிட்ட காசோலை மூலம் ரூ. 20 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 60 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக உறுதிமொழிப் பத்திரம் மற்றும் சென்னையில் தங்களுக்கு பாத்தியப்பட்ட வீட்டுப்பத்திரம் அசல் ஆகியவற்றை அடமானமாக கொடுத்துள்ளனர். 

இதற்கிடையில் கடன் தொகையை திருப்பிச் செலுத்த காலதாமதமானதால் மேற்படி சிவசங்கர் தனது கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தையும், 10.01.2020 தேதியிட்ட உறுதிமொழிப்பத்திரத்தையும் மீண்டும் அடமானமாக கொடுத்துள்ளார். பின் சிவசங்கர் மேற்படி பைனான்ஸ் நிறுவனத்தினரிடம், தங்களால் கடனை திருப்பிச் செலுத்த இயலவில்லை என்றும், தாங்கள் அடமானம் வைத்த கொடைக்கானல் காட்டேஜின் அசல் ஆவணத்தை திருப்பித்தந்தால் அந்த காட்டேஜை விற்று பணத்தை தந்து விடுவதாக நம்பிக்கை வாக்குறுதி கொடுத்து அசல் ஆவணத்தை வாங்கிக் கொண்டு 20.01.2020 அன்று கொடைக்கானல் காட்டேஜை ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்து, பைனான்ஸ் நிறுவனத்திற்கு பணத்தை திருப்பி செலுத்தாமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து ராஜம் பைனான்ஸ் கம்பெனி மேலாளர் பிரபாகரன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்  ஜெயராம்க்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  அந்தோணியம்மாள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்  அனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிவசங்கரை கடந்த 10.02.2023 அன்று கைது செய்தனர். 

இதனையடுத்து கடனாக பெற்ற பணம் ரு. 60 லட்சத்தை சிவசங்கரின் குடும்பத்தினர் உடனடியாக மேற்படி பைனான்ஸ் நிறுவன வங்கிக் கணக்கிற்கு திரும்ப செலுத்தியுள்ளனர். இந்த நடவடிக்கையால் மனுதாரருக்கு மோசடி செய்யப்பட்ட பணம்  ரூ. 60 லட்சத்தை உடனடியாக திரும்ப கிடைத்துள்ளது. உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீடடுக்கொடுத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post