'மை இந்தியா, மை ஸ்கூல்' சார்பாக மூத்த தடகள வீரருக்கு சாதனையாளர் விருது

திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவரும், மூத்த தடகள வீரருமான சுந்தரராஜன் (வயது 86) அவர்களுக்கு "மை இந்தியா மை ஸ்கூல்" அமைப்பின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இவர் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான மூத்தோர் தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு 100 மீ, 200 மீ மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். தனது 86 வயதிலும் இன்னும் இளைஞர் போல மூத்தோர்களுக்கு நடைபெறும் தடகளப்போட்டிகளில் தன்னார்வமாகக் கலந்துகொண்டு, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.

அவருடைய திறமையைப் பாராட்டி, அவருக்கு சிறப்பு செய்யும் நோக்கத்தில் "மை இந்தியா, மை ஸ்கூல்" ட்ரஸ்ட்-ன் அமைப்பாளர் மோகனகிருஷ்ணா தலைமையிலான நிர்வாகிகள், கொங்கு மெயின் ரோட்டிலுள்ள தடகள வீரர் சுந்தரராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து சாதனையாளர் விருது வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் செல்லமுத்து, தடகள பயிற்சியாளர் அழகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post