அக்கினி தனலை அள்ளி வீசி பரவசம்... 60 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்த குண்டம் திருவிழா... பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் கோலாகலம்!

 அக்கினி தனலை அள்ளி வீசி பரவசம்... 60 ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்கி  தீ மிதித்த பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. 

திருப்பூர் , பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில்  மிகப் பிரசித்தி பெற்றது .. ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று  குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான குண்டம் திருவிழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது  திருவிழாவின் முக்கிய நிகழ்வான  குண்டம் இறங்கும் நிகழ்ச்சி  இன்று விடியற்காலையில் 4 மணிக்கு தொடங்கியது.  கோவில் பூசாரிகள் அக்கினி குண்டத்திலிருந்து அக்கினி தனலை அள்ளி வீசி ’கை குண்டம்’ செலுத்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினார்கள்.  தொடர்ந்து பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று  பக்தி  கோஷம்  முழங்க  குண்டம் இறங்கி  தீ மிதித்து நேர்த்திக்கடன்  செலுத்தினர். 60 அடி நீள குண்டத்தில் சிறுவர் சிறுமியர், கைக்குழந்தையுடன் வந்த தாய்மார்கள், வயதானவர்கள் என 60 ஆயிரம் பேருக்கு மேல் பரவசத்துடன் குண்டம் இறங்கி கொண்டத்து காளி அம்மனை வழிபட்டனர்.  விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும்  விழா கமிட்டியின் சார்பாக வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. மேலும் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு கருதி   குண்டத்தின் முன்பு   நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த வருட திருவிழாவில் சுமார்  அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதித்தனர். 

குண்டம் திருவிழாவில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் கலந்து கொண்டார். கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் 50 சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளார்கள். சுமார் 4000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.இன்று மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 60 ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்க திரண்டதால் திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர்  பகுதிகள் திருவிழாக்கோலமாக இருந்தது.

Previous Post Next Post