பூமலூர் அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு "மை இந்தியா மை ஸ்கூல்" சார்பில் உதவி

பூமலூர் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் கடந்த பல ஆண்டுகளாக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் குறுமையம், கல்வி மாவட்டம் மற்றும் மாநில அளவில் பங்கேற்று விளையாடி தொடர்ந்து பரிசுகள் பெற்று வருகின்றனர். இவர்கள் பயிற்சிபெற ஏதுவாக டேபிள் டென்னிஸ் போர்டு, வாலிபால் & விளையாட்டு பயிற்சி ஷூக்களை காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் மை இந்தியா மை ஸ்கூல் ட்ரஸ்ட் அமைப்பாளர் மோகனகிருஷ்ணா ஆகியோர், அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியரும், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளருமான செல்வக்குமாரரிடம் நேரில் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சாதனை படைத்த வீரர்கள் பலர் உடனிருந்தனர். இதுகுறித்து "ஃபைவ் ரிங்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின்" பயிற்சியாளர் செல்வக்குமார் கூறியதாவது...
நான் அரசுப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக கடந்த 2014 முதல் பணியாற்றி வருகிறேன். விளையாட்டில் ஈடுபாடு உள்ள காரணத்தால் ஓய்வு மற்றும் பள்ளி நேரத்திற்குப்பிறகு மாணாக்கர்களுக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். நான் அந்த விளையாட்டின் வீரர் அல்ல. ஆனால் எனக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இலவசமாக சொல்லிக்கொடுப்பதால் ஆர்வத்துடன் பல மாணாக்கர்கள் என்னிடம் பயிற்சிபெறத் துவங்கினர். இதனால் அரசு கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குறுமையம், கல்வி மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றுள்ளனர். இந்த கல்வியாண்டிலும் முதலமைச்சர் கோப்பைக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பயிற்சி பெறுவது அரசுப் பள்ளி மாணாக்கர்கள் என்பதால் போட்டிக்கான உபகரணங்கள் அதிக விலை இருப்பதால், வாங்க இல்லாத சூழலில் காவல்துறை ஆய்வாளர் முத்துக்குமார் அவர்களிடம் இதுகுறித்து தெரிவித்ததன் பேரில் "மை இந்தியா மை ஸ்கூல்" சார்பாக அதனை வாங்கித் தருவதாக கூறினார். இதுமட்டுமல்லாது டேபிள் டென்னிஸ் டேபிளுடன், வாலிபால் மற்றும் விளையாட்டில் சாதித்த மாணாக்கர்களுக்கு ரன்னிங் ஷூக்கள் வாங்கி கொடுத்துள்ளார். நான் எனது விளையாட்டு அகாடமியை இலவசமாகவே தொடங்கியுள்ளேன். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் என்னிடம் பயிற்சி பெற்று வருகின்றனர். "மை இந்தியா மை ஸ்கூல்" போன்ற தன்னார்வ அமைப்புகள் தொடர்ந்து அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு உதவி செய்தால் "தமிழகம்" விளையாட்டுகளில் நிச்சயம் பெரிய சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Previous Post Next Post