பெரும் பனிப்பொழிவுக்கு மத்தியில் பத்ரிநாத் கோவில் தரிசனத்துக்காக திறப்பு... நான்கு புண்ணியதல யாத்திரை முழுமையாக ஆரம்பம்

இந்துக்களின் புண்ணிய தலங்களான நான்கு புண்ணிய தல யாத்திரை இன்று பத்ரிநாத் கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம் முழுமையாக தொடங்கி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில், கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு புண்ணிய தலங்கள் உள்ளன. இந்த கோவில்கள் சார்தாம் என்று இந்தியில் அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, தீபாவளி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் புனித யாத்திரை சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில் கடந்த 22 ஆம் தேதி கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. 

25 ஆம் தேதி கேதர்நாத் திறக்கப்பட்டது. 27 ஆம் தேதியான இன்று பத்ரிநாத்தின் கதவுகளும் தரிசனத்துக்காக திறக்கப்பட்டு உள்ளது. 

கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் உள்ள பகுதிகள் இமயமலையின் உச்சிப்பகுதியில் இருப்பதால் பெரும் பனி பொழிகிறது. பனித்தூவலுக்கும், குளிருக்கும் மத்தியில் இந்த கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரம் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து வருகிறார்கள். 

பத்ரிநாத் கோவில் 108 திவ்யதேசங்களில் 99 வது திவ்யதேசமாகும். இங்கு சாளக்கிரம வடிவத்தில் பத்ரிநாராயணன் காட்சி தருகிறார். கோவில் திறப்பை முன்னிட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தோ திபெத்திய படையினரின் இசை நிகழ்ச்சியுடன் பத்ரிநாத் கோவில் கோலாகலமாக திறக்கப்பட்டது.

இதுவரை 16 லட்சம் பக்தர்கள் இந்த யாத்திரைக்கு பதிவு செய்துள்ள நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் தற்போது இந்தியா முழுவதும் வெயில் கொழுத்தும் நிலையிலும்,  கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதிகளில் பெரும் பனித்தூவலாக பனி பொழிவது குறிப்பிடத்தக்கது. 

Previous Post Next Post