பாதி கேரக்டருக்கு வேலை இல்ல.. கதையையே மாத்திட்டீங்களே மணி சார்... - பொன்னியின் செல்வன் - 2 விமர்சனம்

 ’பொன்னியின் செல்வன்’  இந்த பேரைக்கேட்டாலே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஒரு கூஸ்பம்ப்ஸ் இருக்கும். அதிலும் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படிச்சவங்களுக்கு, சொல்லவே வேண்டாம். மனசுலயே கோட்டை கட்டி அதில ராஜ ராஜ சோழனின் சாம்ராஜ்யத்தை ரசிச்சுக்கிட்டு இருப்பாங்க. 

அதுலயும் அந்த ஆதித்த கரிகாலன் கேரக்டர்., வேற லெவல்.. வரிக்கு வரி வரணனையால்  தூள் கிளப்பி இருப்பார் கல்கி.

அப்படி  கொஞ்சம் கற்பனையும், கொஞ்சம் வரலாறும் கலந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை சினிமாவ எடுக்க பலபேரும் ஆசைப்பட்டு, களத்துலயும் இறங்கினாங்க. நம்ம எம்.ஜி.ஆர்., கூட  பொன்னியின் செல்வன் படத்துல நடிச்சாரு. அப்புறம் அவருக்கு ஏக்சிடெண்ட் ஆனதால கிடப்புல போட்டுட்டாங்க.

கடைசில ஒரு வழியா மணிரத்னம் இந்த படத்தை இயக்கி முடிச்சுருக்கார். முதல் பாகத்துக்கு பலதரப்பட்ட விமரசங்கள் வந்துச்சு. இன்னிக்கு ரெண்டாம் பாகத்தை ரிலீஸ் பண்ணிருக்காங்க.

 படத்தை பார்க்கலாம்னு போனவங்க பலருக்கும் இந்த டிக்கெட் கட்டண வசூல்ல ஒரு பெரிய அலும்பல் பண்றது எரிச்சலை ஏற்படுத்திருக்குங்க. 120 ரூபாய்க்கு டிக்கெட் விற்ற தியேட்டர்ல கூட, 190 ரூபாய்க்கு வித்துருக்காங்க. இதே மாதிரி பல ஊருலயும் முதல் நாள்ங்கறதால டிக்கெட் கட்டணம் அதிகமாம். இதுக்கு மொதல்ல ஒரு கட்டுப்பாடு கொண்டு வாங்க முதல்வரே.

கதை பார்த்தோம்னா புத்தகம் படிச்ச பலருக்கும் தெரிஞ்ச கதை தானே. படிக்காதவங்களுக்காக கதையையே மாத்தி தந்திருக்கார் நம்ம மணி சார். பாதி பேருக்கு ஒன்னும் புரியக் கூடாதுன்னே படம் எடுத்த மாதிரி இருக்கு.

கமலஹாசன் வாய்ஸ்ல ஒரு அறிமுகம் தர்றாங்க. அதத்தான் ஏற்கனவே டிரெய்லர், சினிக் பிக்னு ஏதேதோ பேர வச்சு ஓட்டியாச்சே.. மறுபடியுமா? 
அடுத்ததா படம் ஆரம்பிச்சதுமே ஆதித்த கரிகாலன், நந்தினியின் சிறுவயது காதல் காட்சியோட ஆரம்பிச்சுருக்காங்க. முதல் பாகத்துல பார்த்ததுக்கு, ரெண்டாம் பாகத்துல கேமரா விளையாடிருக்கு. காட்சிகள் செதுக்கி வச்சது போல காட்டிருக்காங்க.

கோடியக்கரை காட்சிகளை பாராட்டலாம். காடுகளை காட்சிப்படுத்துவதில் மணிரத்னம், ரவிவர்மா அலையன்ஸ் தூள் பண்ணிருக்காங்க. 

சின்னஞ்சிறு நிலவே பாட்டு ரசிக்கலாம். ஆனாலும், சின்னஞ்சிறு கிளியே பாட்டை நியாபகப்படுத்துது. அப்புறம் காட்சிகளில் என்ன பிரம்மாண்டத்த காட்டுனாங்கன்னு தேடினாலும் கிடைக்க மாட்டீங்குது. ஒரு ஷாட் கூட கூஸ்பம்ப்ஸ் சீனே கிடையாது. 

முதல் பாகத்த முடிக்கும் போது, ஆதித்த கரிகாலன், அதாங்க நம்ம விக்ரம் பயங்கரமா போர் பண்ணுற ரேஞ்சுக்கு தஞ்சையை நோக்கி கிளம்புறதா காமிச்சாங்க.. இந்த பார்ட்ல அவருக்கு போர் காட்சியே கிடையாதுன்னே சொல்லலாம். ப்ச்.. சிம்ப்ளி ஏமாற்றம். 

ராஷ்டிரகூட போரில் வென்றவர், வீரபாண்டியன் தலை கொண்ட மாவீரன், மூர்க்கமாக போர் புரியும் வீரன்னு பல பட்டங்களை ஆதித்த கரிகாலனுக்கு  கொடுத்துட்டு, போர் காட்சி வைக்காம விடலாமா மணி சார். அதான் முதல் பார்ட்ல வச்சாச்சுன்னு சொல்றீங்களா? அய்யகோ. 190 ரூபாய் போச்சே.. 

பாண்டிய நாட்டோட ஆபத்துதவி கூட்டமா வர்ற கூட்டம் ஓ.கே., தான். மந்திரவாதி ரவிதாசனா வர்ற கிஷோர் சூப்பரா பண்ணிருக்கார். படகோட்டி கருத்திருமன், தேவராளன், ராக்கம்மா எல்லோரும் அவங்கவங்க வேலைய பக்காவா பண்ணிருக்காங்க.

பல போர்களில் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரரான பழுவேட்டரையரா வர்ற சரத்குமார சோக உருவமாவே சித்தரிச்சுட்டாங்க. பழுவேட்டரையரின் கர்ஜனையும் காணோம்.. வீரத்தையும் காணோம். அந்த கம்பீரம் எங்க போச்சு மணிசார்... 

ஆதித்த கரிகாலனா மூர்க்க வீரனா வர்ற விக்ரம் என்னடான்னா ஏகத்துக்கும் வெயிட் கொறச்சு மூர்க்கமே இல்லாம இருக்கார். 

அப்புறம் பழுவூர் இளையராணி நந்தினி... கல்கியின் நாவல்ல அத்துணை பேரையும் மயக்குற அற்புத பேரழகியா வர்ணிச்சுருக்காரு சார்.  ஃபர்ஸ்ட் பார்ட்ல இல்லாட்டியும், செகண்ட் பார்ட்ல ஏதாவது நந்தினியின் மோகனம் இருக்கும்னு வந்து பார்த்தா ஒன்னும் கிடையாது.   ஐஸ்வர்யா ராய, மேக்கப்புல ஊற வச்சு எடுத்துருக்கீங்க. இதான் அந்த நந்தினின்னு சொன்னா எப்டி சார்...

குந்தவை நாச்சியாரா வர்ற திரிஷா கேரக்டர் சூப்பர்... இன்னமும் அழகுப்பதுமையா வந்து போறாங்க... 

அப்புறம் வந்தியத்தேவனா வர்ற கார்த்தி.. நடிச்சுருக்கார்.. பார்த்திபேந்திர பல்லவனா வர்ற விக்ரம் பிரபுவுக்கு இந்த பார்ட்ல கொஞ்சம் வேலை கொடுத்துருக்காங்க.

திரிஷா - கார்த்தி காதல் காட்சி ஒன்னே ஒன்னு இருக்கு. சிம்பிள் ரகம்.

ஸ்கிரீன் பிளேவுக்கு ஏத்த மாதிரி மாத்துறேன்னு பல சொதப்பல் பண்ணி வச்சுருக்காங்க.. ஊமை ராணி ஐஸ்வர்யா ராய்க்கு முக்கியத்துவமே இல்லாத மாதிரி இருக்கு. கடைசில அந்த நந்தினி கேரக்டர நல்லவளா காட்ட சூசைட் வேற பண்ண வுட்டீங்க பாருங்க... என்னா ஒரு ட்விஸ்ட்டு... கல்கி நாவல்படி நந்தினி குதிரைல ஏறி எஸ்கேப் ஆகும்.

செம்பியன் மாதேவி கேரக்டர சைலண்ட் பண்ணிட்டாங்க...

 இந்த ரெண்டாம் பாகத்துல வர்ற பூங்குழலி, சேந்தன் அமுதன் கேரக்டர்கள் எல்லாம் தான்  கதைக்கே உயிர்நாடி.. இந்த பாகத்துல சேந்தன் அமுதன் கேரக்டர்க்கும், பூங்குழலி கேரக்டர்ல வர்ற ஐஸ்வர்யா லட்சுமி கேரக்டர்க்கும் வேலையே இல்லியே. அமுதனையும், பூங்குழலியையும் அவ்ளோ அழகா சித்தரிச்சுருப்பார் கல்கி.

ஏற்கனவே படத்துல மதுராந்தகரா காட்டப்படுற ரகுமான், பாண்டிய வம்சமா எஸ்கேப் ஆயிருவார். அப்புறம் சேந்தன் அமுதன் தான் உண்மையான மதுராந்தகர்னு கண்டுபிடிச்சு அவருக்கு தான் மகுடம் சூட்டுவாங்க.. ஆனா இதுல என்னடான்னா அருள்மொழி வர்மன வச்சு மதுராந்தகனுக்கு முடிசூட்டுறேன்னு, டக்கு புக்குனு கதைய குளோஸ் பண்ண டிரை பண்ணிருக்காரு நம்ம மணி சார். ஆனாலும் மணி சார்... உங்க மேக்கிங் சவ்வா இழுக்குது பார்த்துக்கோங்க.

அப்பூறம் அந்த பழைய மதுராந்தகரா காட்டப்படுற ரகுமான், காளாமுகர்களோட சேர்ந்துக்கிட்டு, ஆட்சிய பிடிக்க டிரை பண்ணுறதாகவும், இனி எல்லாம் சிவோஹம்ன்னு சொல்லிக்கிட்டு சூது பண்ணுறதாகவும் சித்தரிச்சுருக்கீங்க.

ஏக்சுவலி மணி சார், கதைப்படி, மதுராந்தகர் எதுவும் வேண்டாம்னு சிவபக்தரா தான் இருப்பார். அப்புறமா ஆட்சி மேல ஆசை வந்தப்புறம் அதை மறந்துட்டு அரியணை ஏற ஆசைப்படுவார். நீங்க காட்டுறது எல்லாமே முரணா இருக்கு சார். 

மலையே இல்லாத தஞ்சை மண்ணுல மலைமேல ஒரு கல்கோட்டைய வேற காட்டி இது தான் தஞ்சை கோட்டைங்கறாங்க.

  கல்கி எழுதுன வரிக்கு வரியான பிரம்மாண்டத்தையும், அழகியலையும் காட்டக் கூடிய வர்ணனை படிச்சுட்டு இந்த படத்த போய் பார்த்தோம்னா ஏமாற்றம் மட்டும் தான் கிடைக்கும்.

சரி நாவலே படிக்காதவங்க போனா எப்படி இருக்கும். சத்தம் போடாத வசனங்கள், சிலிர்ப்பூட்டாத போர்க்காட்சிகள். எதுக்கு வர்றாங்க, போறாங்கனே தெரியாத கேரக்டர்கள்ன்னு செம்ம மொக்கையா இருக்குது மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன்.

மிகைப்படுத்தாத காட்சிகள வச்சுருக்கேன்னு சப்பைக்கட்டு கட்டவும் வழியில்ல.. பிரம்மாண்டம்ன்னு சொல்லி பீத்தவும் முடியாது. பொன்னியின் செல்வன் பேர வச்சுக்கிட்டு, அந்த கதைக்கு சம்பந்தமில்லாம எதையோ எடுத்து வச்சுருக்கார். 

பல சீன்கள் ராவணன் படத்தையும், மணி ரத்னத்தின் பழைய படங்களையும் தான் நியாபகப்படுத்துங்க. இந்த டல் லைட்டிங் , சைலண்டா டயலாக் பேசுறதும் படத்துக்கு பெரிய மைனஸ்.

டெரர் பண்ணுற பாண்டிய ஆபத்துதவிகள், ஆதித்த கரிகாலன கொல்லுறதுக்குமுயற்சி எடுக்குற  உத்திகள இன்னும் நல்லா காட்டிருக்கலாம்.  ஆழ்வார்க்கடியான் நம்பி, வந்தியத்தேவன் கேரக்டருக்கு எல்லாம் இன்னும் சீன்ஸ் வச்சு கலோக்கியலா எடுத்துருக்கலாம். 

கடைசியா வர்ற போர் காட்சியும் ரொம்ப சிம்பிள் தான். எஃபக்ட் ரொம்ப கம்மி.

வீரம் பேச வேண்டிய பொன்னியின் செல்வன், கமுக்கமா பேசி கடந்து போறது விசித்திரமா  இருக்கு.நானும் பொன்னியின் செல்வன எடுத்து முடிச்சுட்டேன்னு எடுத்துருக்காரே தவிற பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான்.

ஏ.ஆர்.ரஹ்மான்  பேக்ரவுண்ட் மியூசிக் ஏமாற்றம் தான். பல சீன்கள் பேக்ரவுண்ட் மியூசிக்கே இல்லாம போகுது. 

பாகுபலி ரேஞ்சுக்கு இல்லைன்னாலும், பழைய படங்கள் ரேஞ்சுக்காவது எடுத்திருக்கலாம். ஸ்கிரீன் ப்ளே தூங்க வைக்குது. ஃபீல் பேட்...

-அஞ்சல் திரை

Previous Post Next Post