கேதர்நாத்தில் மிரட்டும் ஐஸ் மழை... 15 நாளில் 21 பேர் பலி... காலநிலையை கவனித்து யாத்திரை செல்ல அறிவுறுத்தல்

 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான கேதர்நாத்துக்கும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத்துக்கும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். 


குளிர்காலங்களில் 6 மாதங்கள் அடைக்கப்பட்ட இந்த கோவில்கள் கடந்த ஏப்ரல் இறுதியில் திறக்கப்பட்டது.


ஆனாலும் கோவில் திறக்கப்பட்டது முதல் வானிலை பெரும் சவாலாக மாறி விட்டது. ஏற்கனவே கேதர்நாத் யாத்திரைக்காக பல ஏற்பாடுகளை உத்தரகாண்ட் அரசு செய்தது. வழிகளை சீர்படுத்துதல், மின்சாரம், தண்ணீர் வசதிகளை மலை உச்சிக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஏப்ரல் 25 ஆம் தேதி கேதர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு முன்னரும், தொடங்கிய பின்னரும், வழியெல்லாம் உறைந்து கிடக்கும் பனிப்பாளங்களை அகற்ற சுமார் 400 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் ஒருவாறு பனிக்கட்டிகளை வெட்டி எடுத்து அகற்றினார்கள்.


ஆனாலும், மே முதல் வாரத்திலும் கூடுதலாக பனி பொழிவு இருந்தது. கேதர்நாத் கோவில் இருக்கக்கூடிய கேதார்புரி, பேஸ்கேம்ப் மற்றும் பைரவ் கிளேசியர் பகுதிகளில் மதியம் மற்றும் இரவு நேரங்களில் ஐஸ் மழையாய் பனி பொழிய ஆரம்பித்தது. இது யாத்திரை ஏற்பாடுகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும், தொடர் பனிப்பொழிவில் வழியில் குவிந்த பனி அகற்றவும் பெரும் சிரமம் ஏற்ப்பட்டது. 

இதற்கிடையே கேதர்நாத் யாத்திரை தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில், கோவிலில் பக்தர்கள் குவிய ஆரம்பித்தனர். வானிலையை பொறுத்து சில நாட்கள் பக்தர்களை அனுமதிப்பதும், சில நாட்கள் தடுப்பதுமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

மழை அதிகம் இருந்தால் சோன் பிரயாக் மற்றும் ஸ்ரீநகரில் பக்தர்கள் தடுத்து தங்க வைக்கப்படுகின்றனர். வானிலையை முழுமையாக அறிந்து கொண்டு சாதகமான சூழ்நிலை ஏற்ப்பட்ட பிறகு கோவிலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

கேதார்நாத் பயணத்தில் ஏப்ரல் 25 முதல் மே 10 வரை அதிக குளிர் மற்றும் உடல்நிலை சிக்கல்கள் காரணமாக 21 பேர் மரணித்து உள்ளார்கள். குதிரை ஓட்டிகள் தொடர்ச்சியாக செயல்படுவது காரணமாக 16 குதிரைகள் இறந்துள்ளன. கால நிலை கடும் சவாலாக இருப்பதால், முழுமையாக காலநிலை சீரான பிறகே யாத்திரை செல்வது நல்லது.

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த ஆண்டு தான் மே மாதத்தில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. ஐஸ் மழையாய் பொழிவதால் யாத்திரை செல்பவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. மைனஸ் 3 டிகிரிக்கும் குறைவான குளிரி நிலவுகிறது. 

இதனால் மே 16 வரை யாத்திரை பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

கேதர்நாத் பயண வீடியோவை கீழ்க்கண்ட லிங்க்கில் பார்க்கலாம். 
Previous Post Next Post