திருப்பூர் சித்ரகுப்தர் கோவில் பொங்கல் விழா

திருப்பூர்-மங்கலம் ரோடு, சின்னாண்டிபாளையம் குளம் - எல்&டி டேங்கிற்கு தெற்கே 1 கி.மீ தொலைவில் அருள்மிகு ஸ்ரீசித்ரகுப்தர் திருக்கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசித்ரகுப்தர் தலைப்பாகையுடன், வலதுகையில் எழுத்தாணியும், இடது கையில் சுவடியும் வைத்துக்கொண்டு கணக்கு எழுதும் கோலத்தில் பக்தர்களிக்கு காட்சி தருகிறார். ஸ்ரீசித்ரகுப்தரின் அதிதேவதை கேது பகவான் ஆவார்.எனவே கேது திசை, கேது புத்தி நடப்பில் உள்ளவர்கள் ஸ்ரீசித்ரகுப்தரை வணங்கி வழிபட்டு வந்தால் நிவாரணம் பெறலாம் என்பது ஐதீகம். மேலும், எமதர்மராஜாவின் கணக்கரான ஸ்ரீசித்ரகுப்த பெருமான் சித்திரை மாதம் சித்ராபெளர்ணமியன்று அவதரித்தவர். எனவே ஒவ்வொரு வருடமும் சித்ராபெளர்ணமி அன்று ஸ்ரீசித்ரகுப்தருக்கு பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மக்களின் பாவ புண்ணியங்களை கணக்கிடும் ஸ்ரீசித்ரகுப்தரை அனைத்து மக்களும் வழிபட்டு அருள்பெறலாம். சித்திரை மாதம் பிறந்தவர்கள் அனைவரும் இந்நாளில் வழிபடுவது கூடுதல் சிறப்பு.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் 94ம் ஆண்டு *ஸ்ரீசித்ரா பெளர்ணமி பூஜை* மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. கூனம்பட்டி ஆதீனம் ’வேத சிவாகம சிரோமணி’, ’வேள்வித்திலகம்’, ’திருமுறைப்பேரொளி’, *ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள்* சித்ரகுப்தருக்கு பூஜைகள் செய்து தொடங்கிவைத்தார். விநாயகர் பூஜை, புண்யாகம், சங்கல்பம், வேதிகார்ச்சலை, சித்தி விநாயகர், சித்ரகுப்தர் கலச ஆவாஹனம் சிறப்பு யாகம், பூர்ணாஹூதி, தீபாராதனையுடன் கலசங்கள் புறப்பாடு, சித்தி விநாயகருக்கும், சித்ரகுப்தருக்கும் கலச அபிஷேகம், அலங்காரம், சித்ரகுப்தர் கதை வாசித்தல், சித்ரகுப்தருக்கு அன்னம் படைத்தல், அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனையுடன் நடைபெற்றது.

ஸ்ரீசித்ரகுப்தர் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, *வெள்ளிக்கவசமும், தங்க கிரீடமும் அணிந்து* பக்தர்களுக்கு அருள் வழங்கினார். அவரது முன்பு *தங்க எழுத்தாணியும்* வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். தரிசித்த பக்தர்களுக்கு பூ, எலுமிச்சை கனி, விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் நாள் முழுவதும் தொடர் அன்னதானம் நடைபெற்றது. மங்கலம் காவல்துறையின் சார்பில் போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டன.



Previous Post Next Post