ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது "சீகம் மதுரை பேந்தர்ஸ்"இந்த சீஸனில் 5வது தோல்வியை சந்தித்தது பால்சி திருச்சி

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி அணியை விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சீகம் மதுரை பேந்தர்ஸ் தங்களின் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பால்சி திருச்சி அணி 18.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து,இந்த சீஸனில் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது. சீகம் மதுரை பேந்தர்ஸ் சார்பில் அதிகபட்சமாக பி சரவணன் 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்த, அவருக்கு உறுதுணையாக குர்ஜப்நீத் சிங் மற்றும் அஜய் கே கிருஷ்ணா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.சீகம் மதுரை பேந்தர்ஸ் இந்த சீஸனில் தங்களின் 3வது வெற்றியைப் பதிவு செய்ய 20 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது. மதுரையின் ஒப்பனர்களான லோகேஷ்வர் மற்றும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது 50வது போட்டியில் களமிறங்கிய சீகம் மதுரை பேந்தர்ஸின் கேப்டன் ஹரி நிஷாந்த் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சேலம் மண்ணின் மைந்தரான தங்கராசு நடராஜன் தனது அற்புதமான பவுன்ஸரின் மூலம் ஹரி நிஷாந்த்(11) விக்கெட்டை எடுத்து சொந்த ஊர் மக்களை குஷிப்படுத்தினார்.சுலபமான இலக்கை விரட்டிய சீகம் மதுரை பேந்தர்ஸின் ஜெ கௌஷிக்(19) மற்றும் சுரேஷ் லோகேஷ்வர்(32) விக்கெட்களை இன்று பிறந்தநாள் கொண்டாடிய பால்சி திருச்சி அணியின் கே ஈஸ்வரன் சிறப்பாக பந்துவீச்சின் மூலம் கைப்பற்றினார். பெரிய ஸ்கோர் இல்லாததால் சீகம் மதுரை பேந்தர்ஸ் மிகவும் நிதானமாக விளையாடி இலக்கை சேஸ் செய்தது. இறுதியில் ஸ்வப்னில் சிங்(25*ரன்கள் 19 பந்துகள்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (18*ரன்கள் 15 பந்துகள்) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.இன்றையப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற பி சரவணன் பேசுகையில், இந்த விக்கெட்டில் அதிகமான ரன்களைக் கொடுக்க கூடாது என்பது எங்கள் திட்டமாக இருந்தது, என்னைப் பொறுத்தவரை சரியான லென்த்தில் போடுவது எனது பலம் எனவே அதை மட்டுமே செய்தேன்", என்று தெரிவித்தார்.தோல்விக்குப்பின் பால்சி திருச்சி கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ பேசுகையில், "தொடர்ச்சியான தோல்விகள் எங்களை ஏமாற்றமடையச் செய்தது. தனிப்பட்ட முறையில் எனது ஃபார்மும் சீராக இல்லை. முடிந்தவரை மீதமுள்ள போட்டிகளில் தவறுகள் எதுவும் செய்யாமல் வெற்றிக்காக போராட முயற்சிப்போம்" என்று கூறினார்.வெற்றிக்குப்பின் சீகம் மதுரை பேந்தர்ஸ் கேப்டன் சி ஹரி நிஷாந்த் பேசுகையில், "மூன்று போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது எங்களுக்கு பெரும் நம்பிக்கையளித்துள்ளது. ஆனால் இனிமேல் தான் முக்கியமான ஆட்டம் தொடங்கவுள்ளது, ஏனென்றால் முதல் 4 இடங்களைப் பிடிக்க அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும். அதிலும் இதேபோன்று வெற்றிகளைப் பெற நாங்கள் முனைவோம்", என்று தெரிவித்தார்.இன்றுடன் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இந்த சீஸனுக்கான லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனின் அடுத்த சுற்றுப் போட்டிகள் திருநெல்வேலியிலுள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஜூலை 1 (சனிக்கிழமை) அன்று டபுள் ஹெட்டர் போட்டிகளில் முதல் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் பிற்பகல் 3 மணிக்கு விளையாடவுள்ளனர். அடுத்தப் போட்டி இரவு 7 மணிக்கு நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதவுள்ளனர்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

Previous Post Next Post