திண்டுக்கல் டிராகன்ஸின் வெற்றிக்கு வித்திட்ட "ஷிவம் சிங் மற்றும் ஆதித்யா கணேஷ்"


திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி. ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் 4வது வெற்றியைப் பதிவு செய்தது.முன்னதாக, டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் அடித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சாய் கிஷோர் 35 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க அவருக்கு உறுதுணையாக விஜய் ஷங்கர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் டிராகன்ஸின் பௌலிங்கில் சரவணகுமார் மற்றும் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் மட்டுமே தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. ஓப்பனர் விமல் குமார் பொறுமையாக ஆட்டத்தை ஆரம்பித்தாலும் பவர்ப்ளேவில் பந்துவீசிய சாய் கிஷோரின் பந்தை அடிக்க முற்பட்டு 14 ரன்களில் தனது விக்கெட்டை தவறவிட்டார். அடுத்து வந்த பூபதி குமாரும்(14) சாய் கிஷோரிடம் தனது விக்கெட்டை இழந்தார். முதல் இரண்டு விக்கெட்களை 69 ரன்களுக்கு திண்டுக்கல் டிராகன்ஸ் இழந்தாலும் ரன் ரேட்டை அந்த அணி குறையவிடாமல் பார்த்துக்கொண்டது.கையில் ஏற்பட்ட காயத்தைப் பொருட்படுத்தாமல் விளையாடிய ஓப்பனர் ஷிவம் சிங்கும் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸின் அனுபவ வீரர் ஆதித்யா கணேஷ் இணைந்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஷிவம் சிங் இந்த சீஸனில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அரைசதங்களை விளாசியதோடு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை இன்றையப் போட்டியில் பதிவு செய்தார். மறுமுனையில் அவருக்கு பக்கபலமாக விளையாடிய ஆதித்யா கணேஷ் அட்டகாசமாக விளையாடி 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் சாய் கிஷோர் மட்டுமே 2 விக்கெட்களை கைப்பற்ற மற்ற பெளலர்கள் விக்கெட்களை எடுக்க தவறினர். 3வது விக்கெட்டிற்கு ஷிவம் சிங் மற்றும் ஆதித்யா கணேஷ் இணைந்து 105*ரன்கள் எடுத்ததோடு திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினர். இந்த வெற்றியுடன் திண்டுக்கல் டிராகன்ஸ் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.வெற்றிக்குப்பின் திண்டுக்கல் டிராகன்ஸின் ஆதித்யா கணேஷ் பேசுகையில், 'இந்த விக்கெட் பேட்டிங் செய்ய அருமையாக இருந்தது. நாங்கள் 170 என்பது நல்ல ஸ்கோர் என்ற நினைத்தோம் ஆனால் பேட்டிங் ஆடும்போது எங்களால் இந்த இலக்கை விரைவாக அடைய முடியுமென்று நினைத்தோம். ஷிவம் சிங்கும் சிறப்பாக விளையாடியதால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது" என்று கூறினார்.


இன்றையப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை வென்ற ஷிவம் சிங் பேசுகையில், "பவர்ப்ளேவில் அதிக விக்கெட்களை இழக்காமல் ஆட்டத்தை எடுத்துச் செல்லவேண்டுமென்று திட்டமிட்டோம் அதை சரியாக செய்தோம். அதோடு ஆதித்யா கணேஷ் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்து என் மீதான அழுத்தத்தைக் குறைத்தார். மேலும் டி.என்.பி.எல் தொடரில் விளையாடுவது பெருமையாக உள்ளது" என்று கூறினார்.தோல்விக்குப்பின் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் கேப்டன் என்.எஸ் சத்ருவேத் பேசுகையில், "இன்று எங்களின் வேகப்பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துவீசி விக்கெட்டை எடுக்கத் தவறிவிட்டனர். ஆரம்பத்தில் விக்கெட்டைப் பார்க்கும் போது சற்று கடினமாக இருக்குமென்று நினைத்தோம் ஆனால் அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. நெட் ரன் ரேட் தற்போது மைனஸில் இருப்பதால் மீதமுள்ள போட்டியில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்ய முயற்சிப்போம்", என்று தெரிவித்தார். வெற்றிக்குப்பின் திண்டுக்கல் டிராகன்ஸின் கேப்டன் பாபா இந்திரஜித் பேசுகையில், "உண்மையில் நாங்கள் 20 ரன்கள் அதிகமாகவே கொடுத்துவிட்டோம் என்று நினைத்தேன். ஏனென்றால் விக்கெட் கொஞ்சம் நின்று வந்தது மேலும் இன்று எங்களின் ஃபீல்டிங் அவ்வளவு மெச்சும்படி இல்லை, எனவே பேட்டிங்கில் நன்றாக விளையாட வேண்டுமென்று நினைத்தேன். ஷிவம் மற்றும் ஆதித்யா ஆட்டத்தை அபாரமாக எடுத்துச் சென்று எங்களுக்கான வெற்றியைப் பெற்றுத் தந்தனர்", என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

Previous Post Next Post