நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி சீகம் மதுரை பேந்தர்ஸ் பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனில் இன்று நடைபெற்ற போட்டியில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் 2வது வெற்றியைப் பதிவு செய்தது.முன்னதாக, டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த சீகம் மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. இக்கட்டான தருணத்தில் அந்த அணியை சரிவிலிருந்து மீட்ட ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வெறும் 30 பந்துகளில் 56*ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸின் பௌலிங்கில் சிறப்பாக பந்துவீசி பாபா அபரஜித் மற்றும் சிலம்பரசன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.


சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீஸனில் தங்களின் 3வது வெற்றியைப் பதிவு செய்ய 20 ஓவர்களில் 142 ரன்கள் அந்த அணிக்கு தேவைப்பட்டது. ஓப்பனர்கள் சந்தோஷ் சிவ் மற்றும் அவர்களின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் விக்கெட்டிற்கு இவ்விருவரும் இணைந்து 59 ரன்கள் சேர்க்க சந்தோஷ் சிவ் 28 ரன்களில் முருகன் அஷ்வினின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நாராயண் ஜெகதீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 2000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தப் போட்டியில் படைத்தார். மேலும் இதற்காக அவர் 58 போட்டிகளை எடுத்துக் கொண்டதோடு அதில் 1 சதம் மற்றும் 18 அரைசதங்களை விளாசியுள்ளார்.பொறுப்புடன் விளையாடி வந்த நாராயண் ஜெகதீசனும் 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து முருகன் அஷ்வினின் சுழலில் விக்கெட்டை இழந்தார்.வெற்றியை எட்டிவிடும் தூரத்திலிருந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சீரான இடைவெளியில் தங்களின் முக்கிய பேட்டர்களான சஞ்சய் யாதவ் (9) ப்ரதோஷ் ரஞ்சன் பால்(3) மற்றும் யூ சசிதேவ் (6) விக்கெட்களை இழக்க, ஆட்டத்தின் திசை சீகம் மதுரை பேந்தர்ஸை நோக்கி நகரத் தொடங்கியது. கடைசி 2 ஓவர்களில் 5 விக்கெட்கள் கைவசமிருக்க வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹரீஷ் குமார் 3 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.சீகம் மதுரை பேந்தர்ஸிற்காக 19வது ஓவரை வீசிய அஜய் கே கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி அந்த ஒரே ஓவரில் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸை ஸ்தம்பிக்கச் செய்தார். அதோடு தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.


கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸிற்கு ஒரே நம்பிக்கையாக பாபா அபரஜித் மட்டும் களத்தில் நிற்க 20வது ஓவரின் முதல் பந்தில் குர்ஜப்நீத் சிங்கிடம் தனது விக்கெட்டை இழக்க. ஓட்டுமொத்தமாக ஆட்டம் சீகம் மதுரை பேந்தர்ஸ் பக்கம் திரும்ப அந்த அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்த சீஸனில் தங்களின் 2வது வெற்றியைப் பதிவு செய்தார். நடப்பு சாம்பியனும் இந்த தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இந்த சீஸனில் தங்களின் 4வது தோல்வியைப் பெற்று இக்கட்டான நிலைக்குச் சென்றது.சீகம் மதுரை பேந்தர்ஸ் சார்பில் அதிகபட்சமாக அஜய் கே கிருஷ்ணா 4 விக்கெட்களையும் அனுபவ வீரர் முருகன் அஷ்வின் 3 விக்கெட்களையும் பதிவு செய்து இந்த சீஸனில் தங்களின் அணிக்கு முக்கியமான வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.இன்றைய வெற்றியின் மூலம் சீகம் மதுரை பேந்தர்ஸ் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தையும் தோல்வியடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தொடர்ந்து 4வது இடத்திலும் நீடிக்கிறது.வெற்றிக்குப்பின் சீகம் மதுரை பேந்தர்ஸின் முருகன் அஷ்வின் பேசுகையில், "அஜ்ய கிருஷ்ணா 19வது ஓவரை அட்டகாசமாக வீசினார். அதோடு குர்ஜப்நீத் மீது எங்களுக்கு கடைசி ஓவரின் போது முழுநம்பிக்கை இருந்தது. இக்கட்டான தருணத்தில் வாஷிங்டன் விளையாடிய விதம் எங்கள் அணிக்கு இத்தகைய ஸ்கோரை கொண்டு வந்தது. மேலும் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதோடு சேலத்தில் எனக்கு பெரும் உற்சாகம் கிடைக்கிறது ஏற்கனவே இங்கு சிறப்பாக செயல்பட்டுள்ளதால் அதை தொடர விரும்புகிறேன்" என்று கூறினார்.தோல்விக்குப்பின் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் கேப்டன் நாராயண் ஜெகதீசன் பேசுகையில், "வெற்றி பெற்றிடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது ஆனால் மிடில் ஓவர்களில் எங்களின் முக்கிய பேட்டர்கள் விக்கெட்களை இழந்தது தோல்விக்கு எங்களைத் தள்ளியது. மேலும் பேட்டிங்கில் வாஷிங்டன் விளையாடியவிதமே மதுரை அந்த ஸ்கோரை எட்டகாரணமாக அமைந்தது. இந்த சீஸனில் எங்களின் சிறப்பை நாங்கள் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என்பதை இந்த தொடர் தோல்விகள் உணர்த்துகிறது", என்று தெரிவித்தார் வெற்றிக்குப்பின் சீகம் மதுரை பேந்தர்ஸ் கேப்டன் ஹரி நிஷாந்த் கூறுகையில், ஒரு கட்டத்தில் நூறு ரன்களைத் தொடுவோமா என்ற சந்தேகம் எழுந்தது ஆனால் வாஷிங்டன் சுந்தர் தான் ஒரு அனுபவ வீரர் என்பதை தனது அபாரமான ஆட்டத்தால் நிரூபித்துள்ளார் அதேசமயம் முருகன் அஷ்வின், அஜய் கிருஷ்ணா மற்றும் குர்ஜப்நீத் சிங் போன்ற பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு இன்று வெற்றியைப் பெற்றுத் தந்தனர்" என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் 

Previous Post Next Post