இனி எப்போ வேணாலும் நூல் விலை உயருமாம்... திருப்பூர் தொழில் வேறு மாநிலங்களுக்கு இடம்பெயரும் அபாயம்.!

 எந்த நேரம்  வேண்டுமானாலும் நூல் விலை மாற்றம் செய்யும் முறைக்கு நூற்பாலைகள் மாறி உள்ளது பனியன் தொழில் வேறு மாநிலங்களுக்கு செல்லும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது.

திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.  கடந்த ஆண்டில்  அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையை தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலைகளும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திலும் நூல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் நீடித்தது. 

இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ. 20 முதல் 25 குறைந்தது. இதற்கிடையே நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்டு) நூல் விலையை நூற்பாலைகள் கடந்த 1ம் தேதி அறிவித்தன. இதில் கடந்த மாத விலையே தொடரும் எந்த மாற்றமும் இல்லை என நூற்பாலைகள் அறிவித்தன. இதற்கிடையே நூலின் விலையை உயர்த்துவது மற்றும் இறக்குவதுமான விலை நிர்ணயம் செய்யும் பணியை நூற்பாலைகள் அமைப்பு கைவிட்டுள்ளது பனியன் தொழிலுக்கு பேரிடியை கொண்டு வந்து உள்ளது. பருத்தி உற்பத்தி மற்றும் பதுக்கலில் ஏற்படும் நிலையிலா காரணிகளால்  நூல் விலை நிர்ணயம் செய்வதை நூல் உற்பத்தி செய்யக் கூடிய ஸ்பின்னிங் அமைப்புகள் கைவிட்டுள்ளன. மாதா மாதாம் விலை நிர்ணயம் என்ற நிலை மாறி, தினமும் அன்றைய நிலைக்கு ஏற்ப நூல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்து உள்ளார்கள். அதனடிப்படையில் இன்றும் நூல் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து உள்ளது. எப்போது எவ்வளவு உயரும், அல்லது இறங்கும் என்று தெரியாத நிலை இதன் மூலம் உருவாகி உள்ளது. 

 அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு  ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.175-க்கும், 16-ம் நம்பர் ரூ.185-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.243-க்கும், 24-ம் நம்பர் ரூ.255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ.280-க்கும், 40-ம் நம்பர் ரூ.300-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.235-க்கும், 24-ம் நம்பர் ரூ. 245-க்கும், 30-ம் நம்பர் ரூ.255-க்கும், 34-ம் நம்பர் ரூ. 270-க்கும், 40-ம் நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்லா நூல் விலை உயர்வு, இறங்கும் நிலையை கண்டித்து நூற்பாலைகள், பின்னலாடை நிறுவன அமைப்புகள் என அனைத்தும் வரும் 5 ஆம் தேதி மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தினை அறிவித்து இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டு நூல் விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள். 

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியது:

பருத்தி விலை உயர்வால் நூல் விலை உயர்வு கட்டாயமாகி இருக்கிறது.

நூல் விலை பனியன் உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய அரசு நூற்பாலைகள் அனைத்துக்கும் நேரடியாக பருத்தி வழங்க வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் வழங்க கூடாது. அப்போது தான் பதுக்கலை தடுக்க முடியும். பருத்தியை தமிழக அரசே கொள்முதல் செய்து நூற்பாலைகள் அனைவருக்கும் தர வேண்டும். தமிழகத்தின் பருத்தி தேவை 110 லட்சம் கேண்டியாக உள்ள நிலையில், இங்கு 6 லட்சம் கேண்டி மட்டுமே உற்பத்தியாகிறது. அதற்கு மேல் வெளி மாநிலங்களை சார்ந்து இருக்கிறோம். எனவே பருத்தி உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்.மேலும் நூல் விலை நிர்ணயம் செய்வதை தினமும் எப்படி வேண்டுமானாலும் ஏற்றி இறக்கலாம்  என்ற நிலையும் மாற்றி அதையும் நிலைப்படுத்த வேண்டும். பருத்தி விலை ஏற்றம் மற்றும் பதுக்கலை கட்டுப்படுத்த வேண்டும். 

மின்கட்டண உயர்வும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் தமிழகத்துக்கு மிகப்பெரிய போட்டியாக உருவாகி வருகிறது. தமிழக அரசு கவனத்துடன் செயல்படா விட்டால் ஜவுளி தொழில் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போது மலிவு விலை துணிகள், பங்களாதேஷ் இறக்குமதி போன்றவை திருப்பூர் தொழிலுக்கு போட்டியாக அமையும்.என்றார்.

Previous Post Next Post