மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி! உடனே ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

*மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி!   உடனே ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!!                    மயிலாடுதுறையில் 1965ல் கட்டப்பட்ட காமராஜர் பேருந்து நிலையமும், நகரப் பூங்காவில் தற்காலிகமாக இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் இருந்தும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருந்துகள் 3000 முறை வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் இப்பேருந்து நிலையங்களை பயன்படுத்தி வரும் நிலையில் நிழற்குடை, இருக்கைகள், குடிநீர் வசதி, நல்ல சாலை வசதி, இலவச கழிப்பறை வசதி  போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றார்கள். மயிலாடுதுறையில் உள்ள இரண்டு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை கட்டணமில்லா கழிவறை இயங்காததால் கூடுதல் கட்டணம் கொடுத்து கழிவறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை தனியார் ஒப்பந்ததாரர்கள் நிர்வகித்து வந்த கழிவறை தற்பொழுது நகராட்சி நிர்வாகத்தாலே நிர்வகிக்கப்படுகின்ற நிலையிலும் கூட அதன் கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாகும். மேலும் ஏற்கனவே கட்டப்பட்ட இலவச கழிப்பறையையும் சுத்தம் சுகாதாரம் தண்ணீர் வசதியுடன் பராமரிக்க வேண்டும் என்றும்  பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். கட்டணம் இல்லாமல் பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணிக்கின்ற பொழுது கழிவறைக்கு  கட்டணம் அதிகமாக வசூலிப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக பெண்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். குடிநீர் வசதி பேருந்து நிலையத்திற்குள் இல்லாததால் பாட்டில் தண்ணீரை அதிக விலை கொடுத்து பேருந்து நிலைய கடைகளில் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. சாதாரணமாக 15 ரூபாய் ஒரு லிட்டர் பாட்டில், 20ரூபாய்க்கும், குளிரூட்டப்பட்ட பாட்டில் 25 ரூபாய்க்கும் விற்கப்படுவது மிகவும் வேதனை அளிக்கின்றது. அதேபோல சாலை சீரமைக்கப்படாதததால் குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. பேருந்தை பிடித்து இருக்கையில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் வேகமாக செல்கின்ற பெண்கள் குழந்தைகள் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆங்காங்கே  கீழே விழுகின்ற சம்பவங்களும், அதனால் காயங்கள் ஏற்படுவதும் தினசரி நடக்கின்றதாக மாறிவிட்டது. மேலும் மழை நேரங்களில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் அதிக மக்கள்கூட்டம் தவிக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஓரளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டாலும் கூட மீண்டும் மீண்டும் குப்பைகள் சேர்வதால் இரண்டு முறை துப்புரவு செய்ய வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில் இன்னும் குறைந்தது ஓராண்டிற்கு மேலாக இந்த இரண்டு பழைய பேருந்து நிலையங்களை தான் மயிலாடுதுறை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதால் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து அதிக வருவாய் நகராட்சிக்கு கிடைக்கின்ற காரணத்தினால் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக குடிநீர் வசதி, இலவச கழிவறை வசதி, நிழற்குடை வசதி, சாலை சீரமைப்பு , பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்.   பல்வேறு கிராமங்களுக்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு வருகை புரியும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் பேருந்து நிலையத்தில் அமர உரிய இருக்கை வசதி இன்றி நீண்ட நேரம் கால் கடுக்க நிற்கும் சூழல் உருவாகியுள்ளதால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மேலும் அவ்வாறு நீண்ட நேரம் கால் கடுக்க நிற்க முடியாதவர்கள் சிலர் தரையில் அமருகின்ற நிலைகளும் காணப்படுகின்றது.எனவே இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு உரிய இருக்கை வசதிகள் அமைத்து தர வேண்டும் என்பதே பேருந்து பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.    ஏற்கனவே இருக்கின்ற கட்டமைப்பையும் பராமரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post