மனையை சர்வே செய்து தர மறுத்த தாசில்தாருக்கு அபராதம்... நீதிமன்றம் உத்தரவு

 சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார். 

அதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 100/- க்கு பணம் கட்டியிருந்தார். 

ஆனால் தாசில்தார் மனையை அளக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சேகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தார்.

 ஆனால் பயனில்லை. எனவே மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து, மனையை சர்வே செய்து தர உத்தரவிட வேண்டும் மற்றும் இழப்பீடாக ரூ. 1 லட்சம் தர உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

வழக்கில் ஆஜரான தாசில்தார், மனையை அளக்க இரண்டு பேர் ஆட்சேபனை தெரிவித்தால் அளக்கவில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம்...மனை சேகருக்கு பாத்தியமானது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.ஆவணங்கள் அனைத்தும் சேகர் பெயரிலேயே உள்ளது. ஆனால் தாசில்தார் இரண்டு பேர் நிலத்தை அளந்து கொடுக்க ஆட்சேபனை செய்வதாக கூறுகிறார். அந்த இரண்டு பேரின் ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சேபனை செய்பவர்களிடமிருந்து அபிடவிட் பெறவில்லை ஆட்சேபனை செய்பவர்களை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை. ஆட்சேபனை செய்பவர்களுக்குரிய எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. ஆட்சேபனை செய்மவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தது யார் என்று தெரியவில்லை. பதிவு செய்தவரின் பெயரும் இல்லை. 

சொத்துக்கு சம்மந்தமே இல்லாத இருவர் ஆட்சேபனை செய்ததாக கூறி சர்வே பண்ணுவது மறுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆட்சேபனை செய்ததால் இடத்தை அளக்கவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், அப்படி அளக்க மறுக்கலாம் என்பதற்கு ஏதாவது சட்டம் அல்லது விதிகள் உள்ளதா? என்று தாசில்தாரால் கூறப்பட முடியவில்லை.

 ஆட்சேபனை தெரிவித்தால் நிலத்தை அளக்க தேவையில்லை என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்றால் அதற்கும் விளக்கமில்லை. எந்த சட்டமும், ஆணையும் இல்லாமல் ஆட்சேபனை செய்கிறார்கள் என்று கூறி நிலத்தை அளந்து கொடுக்காமல் இருப்பது சேவைக்குறைபாடு ஆகும்.

 தாசில்தார் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார். பணியில் அலட்சியமாக இருந்துள்ளார். இது சேகருக்கு மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தும் செயலாகும். அரசு அதிகாரிகள் சட்டப்படியே ஒரு செயலை செய்யவோ அல்லது மறுக்கவோ முடியும்.

தாசில்தார் சேகர் ஒரு நுகர்வோர் கிடையாது என்றும் வருவாய்த்துறை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக நுகர்வோர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியாது என்றும் ஒரு வாதத்தை வைத்துள்ளார். ஆனால் அந்த வாதத்தை ஏற்க முடியாது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் " காஸியாபாத் வளர்ச்சி முகமை Vs பல்பீர்சிங்" என்ற வழக்கில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அனைத்து அரசுத்துறை அலுவலங்களில் நடக்கும் சேவைக்குறைபாடுகளுக்கும் பொருந்தும்.

 அனைத்து அரசு அலுவலகங்களும் நுகர்வோர் சட்டத்தின் கீழ் வரும். பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளில் அலட்சியமாக இருந்தால், அந்த அதிகாரிகளை நுகர்வோர் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரலாம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் " ஹரியானா நல வளர்ச்சி முகமை Vs சாந்தி தேவி" என்ற வழக்கில், ஒரு இந்திய குடிமகனுக்கு தீராத மன உளைச்சலையும், நிம்மதியின்மையையும் ஒரு அரசு அதிகாரி பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல்" Dr. R. ஜெகன் Vs Director motor vehicles maintenance department & others என்ற வழக்கிலும், Shiksha vihar sehkari avaas samithi Ltd Vs Chairman Ghaziabad Development Authority and Another என்ற வழக்கிலும் இதே கருத்தை உத்தரவாக தேசிய நுகர்வோர் ஆணையம் வழங்கியுள்ளது. மேற்கண்ட தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த வழக்கை பார்க்கும் போது, தாசில்தார் பணியில் அலட்சியமாக இருப்பதும், சேவைக்குறைபாடு செய்திருப்பதும் நன்றாக தெரிய வருகிறது.

ஆகவே 15 நாட்களுக்குள் சேகரின் நிலத்தை தாசில்தார் அளந்து கொடுக்க வேண்டும் மேலும் ரூ 10,000/- இழப்பீடாகவும், ரூ. 2000/- வழக்கு செலவுத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


Previous Post Next Post