குப்பையில் வீசப்படும் பாட்டிலில் தயாராகும் டி ஷர்ட்... திருப்பூர் நிறுவனத்தின் அசத்தல் முயற்சி

 திருப்பூரில் குப்பையில் வீசப்படும் கழிவு பிளாஸ்டிக் (PET) பாட்டில்கள் மூலம்  செயற்கை நூலால் தயாரிக்கப்படும் பின்னலாடைகளுக்கு வெளிநாட்டு வர்த்தகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. தினசரி 70 லட்சம் பாட்டில்களை  மறுசுழற்சி செய்து 110 டன் அளவுக்கு செயற்கை நூலிழைகளை உருவாக்கி சுற்றுச்சூழலுக்கு துணை நிற்கிறது திருப்பூரை சார்ந்த சுலோச்சனா காட்டன் நிறுவனம்.

திருப்பூரில் உள்ள சுலோச்சனா நிறுவனம் 86 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த நிறுவனம்  ஆடை தயாரிப்புக்கான நூல் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறு சுழற்சி செய்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதற்காக நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் தினசரி 70 லட்சம் பிளாஸ்டிக் கழிவு பாட்டில்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் இந்த நிறுவனத்தில் உள்ள நான்கு பெரிய இயந்திரங்களில் பல்வேறு கட்ட பணிகளுக்கு பிறகு செயற்கை நூலிழையாக மாற்றப்படுகின்றன. 

இதில் முதல் கட்டமாக கொள்முதல் செய்யப்படும் கழிவு பாட்டில்கள் ஸ்ட்ரெட்டர் இயந்திரம் மூலம் அரைத்து ஃபிளேக்ஸ் எனக்கூடிய துகள்களாக மாற்றப்படுகிறது. இந்த துகள்கள் வாஷிங் பகுதியில் சுத்தம் செய்யப்பட்டு, உலர்த்திய நிலையில், குழாய்கள் மூலமாக மிகப்பெரிய இயந்திரத்துக்கு அனுப்பப்பட்டு, உருக்காக மாற்றப்படுகிறது. 

இதில் திரவ நிலையில் இருக்கும் போதே தேவையான வண்ணங்களை அதில் சேர்த்து விடுகிறார்கள். இதன்மூலம் 70 நிறங்களில் செயற்கை நூலிழை தயாரிக்கப்பட்டு, பஞ்சு போல மாற்றுகிறார்கள். 

இந்த செயற்கை பஞ்சு ஸ்பின்னிங் செய்யப்பட்டு நூல் வடிவில் மாற்றப்படுகிறது. பிறகு அந்த நூலை வழக்கமாக பின்னலாடைகளை நிட்டிங் செய்யப்படும் இயந்திரங்கள் மூலம் நிட்டிங் செய்யப்பட்டு பின்னலாடை தயாரிக்கக் கூடிய பாலியஸ்டர் துணி வகைகளாக உருவாக்கப்படுகிறது.  இந்த துணிகள் தேவையான வடிவில் தைக்கப்பட்டு ஏற்றுமதிக்கு அனுப்பப்படுகிறது. 

இவ்வாறு 20 முதல் 40 பாட்டில்களை உருக்கி ஒரு டி ஷர்ட் தயாரிக்க முடிகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் செயற்கை நூல் முதல்கட்டத்தில் உருக்கு நிலையிலேயே சாயமேற்றப்படுவதால், சாயமேற்ற தண்ணீர் பயன்பாடு, அதிகப்படியான சாய செலவு போன்றவை குறைந்து விடுகிறது. இவ்வாறு இந்த நிறுவனம் 70 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி 110 டன் செயற்கை பாலியஸ்டர் நூலிழையை தயாரிக்கிறது. இது ஜவுளித்தொழிலில் பெரிய அளவு மாற்றத்தை ஏற்படுத்தும். 

வருங்காலத்தில் பருத்தி நூல் விலை உயரும் நிலையில் இந்த செயற்கை நூல் தான் பெரிய அளவிலான சந்தை பொருளாக இருக்கும் என பின்னலாடை வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள். அதிலும் கழிவு பாட்டில்கள் மூலம் உருவாக்கப்படும் செயற்கை நூலிழை பெரும் வரவேற்பை பெறும் என கருதப்படுகிறது. 


இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிலைத்தன்மை தலைமை அதிகாரி சபரி கிரீஷ் கூறுகையில், ‘ நாங்கள் தினசரி 70 லட்சம் பாட்டில்களை மறு சுழற்சி செய்து பாலியஸ்டர் நூலாக மாற்றி வருகிறோம். டோம் டை என்ற முறையில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாமல் சாயமிடப்படுகிறது. இதன்மூலம் செலவும் குறைகிறது. சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இந்த பாலிஸ்டர் பைபர் ஆயத்த ஆடை மட்டும் இல்லாமல் கார்ப்பெட் தயாரிப்பு, கார் உதிரி பாக தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. எங்களது நிறுவனத்தில் காட்டன் வேஸ்ட்களும் மறு சுழற்சி செய்யப்படுகிறது. எங்கள் நிறுவனத்துக்குள் வரக்கூடிய கழிவு பாட்டில்கள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. 

இதன் மூலம் 2 லட்சம் பாட்டில் பொறுக்குபவர்கள் பயனடைகிறார்கள். கழிவு பாட்டில்கள் மண்ணுக்கு ஊறு விளைவிப்பது தவிர்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது, மறு சுழற்சி செய்யப்பட்ட செயற்கை நூலிழை மூலம் தயாரிக்கப்படும் பின்னலாடைகளை மேற்கத்திய வர்த்தகர்கள் ஆர்வமுடன் வாங்குகிறார்கள். எங்களது நிறுவனம் முழுமையாக மறுசுழற்சி செய்யும் நிறுவனமாக இருக்கிறது.  தற்போது 96 சதவீத அளவுக்கு கார்பன் நியூட்ரல் நிறுவனமாக செயல்படுகிறோம். என்றார். 



Previous Post Next Post