தற்காலிக தோல்வியை படிக்கட்டுகளாக மாற்றுங்கள்... செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரை

திருப்பூர், காங்கேயம் சாலையிலுள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது.

 பள்ளியின் மாணவத்தலைவர் தனிஷ்கா மற்றும் ஜீவிகா வரவேற்புரையாற்றினார்கள். பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி அனிதா ஜோசப் ஆண்டறிக்கை வாசித்தார். நல்லூர் புனித நற்கருணை திருச்சபையின் அருட்தந்தை செபாஸ்டியன் மரிய சுந்தரம் இறை வழிபாடு செய்து வாழ்த்தினார். இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சேர்மன் ’சமூக சேவகி’ இந்திரா சுந்தரம் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களிடம் தலைமையுரையாற்றினார்…

மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேசியதாவது: மாணாக்கர்கள் படிக்கும் காலகட்டத்தில்தான் நண்பர்கள் பலர் கிடைப்பார்கள். அவர்களில் நமக்கேற்ற நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்களிடம் மத இன வேறுபாடு பார்க்கக்கூடாது. நமக்கான நல்ல நண்பர்களுடன் நமது சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். நண்பர்களை முறைப்படி பயன்படுத்தி வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும். பள்ளி, கல்லூரி நாட்களில் படிக்கும் காலகட்டத்தில் கவனச் சிதறல் ஏற்படாமல் படிப்புடன் மட்டுமல்லாது சமூக பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களிடம் மிகவும் பணிவுடன் நடந்துகொண்டு, அவர்கள் கற்றுத்தரும் கல்வியினை உங்களது வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டு, அவரவர்கள் விரும்பிய துறைகளில் சேர்ந்து, பணிகளில் சாதனைகள் பல புரிய வேண்டும். வரும் காலங்கள் மிகவும் சவாலானது. பாடங்களுடன் விளையாட்டு மற்றும் இதர கூடுதல் படிப்புகளையும், திறன்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். எங்கு இருந்தாலும் தனித்திறமை மிக்கவர்களாக விளங்க வேண்டும். பள்ளியில் நடைமுறையிலுள்ள மன்ற செயல்பாடுகளில் அனைவரும் கட்டாயம் பங்கெடுக்க வேண்டும். பெற்றோர்களின் கஷ்டங்களை உணர்ந்து பாடங்களை விருப்பத்துடனும் உத்வேகத்துடனும் பயில வேண்டும். தற்காலிகமாக வரும் தோல்வியை நினைத்து வருத்தப்படாமல், அதனை படிக்கற்களாக மாற்றி முன்னேறிச் செல்ல வேண்டும்”.இவ்வாறு அவர் பேசினார்.

  நிகழ்ச்சியில் பள்ளியில் பல ஆண்டுகளாகப் பணியாற்றிய ஆசிரியைகள் ஜீன் ரூபி மற்றும் வசந்தி ஆகியோர் பணி ஓய்வுபெறுவதையொட்டி பாராட்டப்பட்டனர். பள்ளியின் மாணவ துணைத்தலைவர் பெனடிக்ட் சாமுவேல் மற்றும் மணீஷ் ஆகியோர் நன்றியுரை கூறினர். .

Previous Post Next Post