திருப்பூரில் 3 மாதத்தில் 12 ஆயிரம் பேரை கடித்து குதறிய தெருநாய்கள்... ’கடி’ தாங்காமல் தவிக்கும் திருப்பூர் மக்கள்

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 12 ஆயிரம் பேரை தெருநாய்கள் கடித்து குதறியதில் காயம்பட்டு திருப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று உள்ளனர். 

திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தெருநாய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. வீதிகள் தோறும் மிரட்டும் தெருநாய்களால் மக்கள் படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் முதல் பச்சிளம் குழந்தைகள் வரை நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர். சில இடங்களில் நாய்கள் கடித்து குதறியதில் பெரும் காயமடைபவர்களும் இருக்கிறார்கள். கடந்த 3 ந்தேதி ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த 2 வயது சிறுமியை 6க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. இதில் காயமடைந்த அந்த சிறுமி சிகிச்சைக்கு பின் மீண்டிருக்கிறார். 

 இப்படி தொடரும் தெருநாய்க்கடியால், திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில், தெருக்களில் நடந்து செல்லவே மக்களிடம் அச்சம் நிலவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தெருநாய்களால் மிகவும் பயந்துகொண்டே செல்லும் நிலை உள்ளது. காலையில் வாக்கிங் செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்கு செல்பவர்கள் வரை தெருநாய் கடியால் அவதிப்படுகின்றனர்

. திருப்பூர் வாலிபாளையம், ராயபுரம், பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், பெரிச்சிபாளையம், தென்னம்பாளையம், ராயபுரம், குமார் நகர், பிச்சம்பாளையம்  உள்பட மாநகர வீதிகளில் தலா 10–க்கும் மேற்பட்ட நாய்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவசரத்தில் செல்பவர்களை விரட்டி கடித்து குதறும் தெருநாய்களால் காயம்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், அவினாசி, மடத்துக்குளம் உள்ளிட 9 ஒன்றியங்களில் கடந்த 3 மாதத்தில் மட்டும்  3,900 பேர் நாய் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதே போல் நகர்புற ஆரம்ப சுகாதர நிலையங்களில் 4,000  பேருக்கும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் 4,300 பேர் என மாவட்டம் முழுவதும் கடந்த 3 மாதத்தில் மட்டும் 12000 பேருக்கு நாய் கடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என சுகாதர துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஏராளமானவர்கள் தெருநாய்க்கடி பட்டு தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெறுகிறார்கள்.

தெருநாய்க்கடிபட்டு வலி வேதனை ஒரு பக்கமும், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் அவதிப்படுவது ஒருபக்கமுமாக பெரும் தொல்லை தருகின்றன இந்த தெருநாய்கள்.  திருப்பூர் மாநகரில் மட்டும் 50 ஆயிரம் தெருநாய்களுக்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

ஏற்கனவே தெருநாய்களை பிடித்து குடும்பக் கட்டுப்பாடு செய்யும் பணிகள் நடப்பதாக கூறினாலும், அந்த பணிகள் சரியாக செய்யாததால் தான் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சியும் தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து செய்யும் இந்த தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணி சரியாக செய்யாததால் தான் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து மக்கள் பெரும் வலி வேதனையால் அவதிப்படுகின்றார்கள். 

பகுதிவாரியாக தெருநாய்களை பாலின வாரியாக கணக்கெடுத்து, அவற்றுக்கு கருத்தடை செய்வது, அதிகம் பேரை கடிக்கின்ற நாய்களை பிடித்து பிராணிகள் நல அமைப்புகளை பராமரிக்கச் செய்வது போன்ற பணிகளை செய்ய வேண்டும். மேலும் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்தாலே பெரும்பாலும் நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் இதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது. 


Previous Post Next Post