உத்தரகாசி சுரங்க இடிபாடுகளில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு... கடைசி நேரத்தில் கைகொடுத்த ‘எலி துளை’ வித்தகர்கள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. சார்தாம் என்று சொல்லக்கூடிய கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பயன்பெற ‘மாஸ்டர் பிளான்” திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது. 

இதில் உத்தரகாசி பகுதியில் உள்ள இரண்டரை கி.மீ., நீளத்துக்கு பிரம்மாண்ட மலைச்சுரங்கப் பணி நடந்து வந்தது. கடந்த 12 ம் தேதி இந்த மலைச்சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத்தில் 200 மீட்டர் தூரம் இடிபாடுகள் சுரங்கப்பாதையை மூடின. அதற்கும் உள்ளாக 400 மீட்டர் அளவுக்கு இருந்த காலி இட பகுதியில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 

இவர்கள் அனைவருமே பல்வேறு வெளிமாநில தொழிலாளர்கள் ஆவர். இவர்களை மீட்கும் சவாலான பணிகள் கடந்த 17 நாட்களாக நடந்து வந்தது. பணியில் சிறு பிசகு ஏற்பட்டாலும் 41 பேரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் தேசிய மற்றும் உத்தரகாண்ட் மாநில பேரிடர் மீட்பு படையினர் பணிகளை மேற்கொண்டனர். முதலில் பக்கவாட்டில் சிறு அளவில் துளையிடப்பட்டு உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சில நாட்களில் அந்த பகுதியில் இடிபாடுகள் ஏற்பட்ட நிலையில் கைவிடப்பட்டு மேலிருந்து துளையிட்டு மீட்க முடிவு செய்யப்பட்டது.

 மொத்தமுள்ள 57 மீட்டர் துளையிடும் பணியில் கடைசி 3 மீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே இயந்திரம் மூலம் துளையிடப்படும் பணிகள் நிறுத்தப்பட்டு, கைகளால் துளையிடப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ‘’எலி வளை” சுரங்கப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மீட்கப்பட்டனர் எலி துளை சுரங்கம் தோண்டும் பணி என்பது மேகாலயா மாநிலத்தில் நிலக்கரி தோண்டுவதற்காக மனிதர்களே சாதாரண மண்வெட்டி, கடப்பாரைகளை கொண்டு சுரங்கம் தோண்டும் வகையாகும். இதில் இருக்கும் அபாயம்  காரணமாக இந்த எலி துளை சுரங்கம் துளையிடுபவர்களுக்கு தடை விதித்து இருந்தார்கள். ஆனாலும் சட்டத்துக்கு புறம்பாக ஆங்காங்கே இந்த எலி துளை வித்தகர்கள் பணிகளை மேற்கொண்டு தான் இருக்கிறார்களாம். 

இந்த எலி துளை தோண்டும் பணியாளர்கள் தான் உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கத்தின் கடைசி நேர தோண்டும் பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். மொத்தம் 57 மீட்டர் தூரத்தில் 52 மீட்டர் இயந்திரங்கள் மூலம் துளையிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 3 முதல் 5 மீட்டர் நீளத்தை சில மணி நேரத்தில் இவர்கள் கைகளால் தோண்டி 41 பேரின் உயிரைக் காப்பாற்ற உதவி இருக்கிறார்கள். இந்த எலிதுளை வித்தகர்கள் உ.பி., மாநிலத்தின் ஜான்சியில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் என்பது குற்இப்பிடத்தக்கது.


இந்த பணிகளுக்கு பிறகு தோண்டப்பட்ட துளை சரியாமல் இருக்க இரும்பு குழாய்கள் பொருத்தப்படுகிறது. இதன் வழியாக ஒவ்வொரு தொழிலாளியாக பத்திரமாக மீட்கப்படுவார்கள். இன்று மாலை 4 மணியளவில் பைப் செருகும் பணிகளும் முழுமையாக முடிவடைதுள்ளதாக அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டபின் அவர்களுக்கு கொடுக்க  வேண்டிய உடைகள் எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. உறவினர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவ வசதிகள், தொலை தொடர்பு என அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளார்கள். 

இந்த நிலையில் சுரங்கத்தில் மாட்டிய அனைவரும் பைப் வழியாக மீட்கப்பட்டார்கள். இரவு 9 மணியளவில் அவர்கள் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டனர். அவர்களுக்கு மாலை அணிவித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. 

17 நாட்கள் நீடித்த மிகப்பெரிய சவாலாக கருதப்பட்ட மீட்பு பணியில் 41 உயிர்களும் காப்பாற்றப்பட்டு இருப்பது குறிப்பிட்தக்கது.
Previous Post Next Post