மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, புதிய போஸ்ட் ஆபீஸ் திறக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை

*மயிலாடுதுறை  பஜார் போஸ்ட் ஆபீஸை மூடாமல், புதிதாக கட்டப்படும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, புதிய  போஸ்ட் ஆபீஸ் திறக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!*           தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை கடந்த 2020 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. தனியாக மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டு,  114 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரங்கம்பாடிசாலை பால்பண்ணை அருகே  பலஅடுக்கு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.பணிகள்  நிறைவு பெற்று விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய கட்டிடத்தில் இயங்க உள்ள சூழலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கென தனியாக அஞ்சல் அலுவலகம் அவசியம்  தேவையாகும். இந்நிலையில் அதற்காக  மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு ராஜ் பில்டிங்கில் பல ஆண்டுகளாக இயங்கி  வரும்  பஜார் அஞ்சலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்ற இருப்பதாக தகவல் வருகிறது. மயிலாடுதுறையில் ஏற்கனவே இருந்த லால் பகதூர் நகர் அஞ்சலகம், கூறைநாடு அஞ்சலகம் போன்றவை மூடப்பட்டு விட்டதால், மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், மயிலாடுதுறை பஜார் போஸ்ட் ஆபீஸ் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரிதும் உதவியாக இருந்து வருகின்ற நிலையில், அதனையும் மூடிவிட்டு புதிய  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு கொண்டு சென்றால் மயிலாடுதுறை மிகப்பெரிய மாவட்டமாக உருவாகிய பிறகு தலைமை அஞ்சலகத்தின் செயல்பாடும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படும். மத்திய மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் தபால் தொடர்பு, நிதி பரிவர்த்தனை போன்ற சேவை ஒரே இடத்தில் இருந்தால்  மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவது உறுதி. மேலும்  நேர விரையமும்  ஏற்பட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஆகவே புதிதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டதால், புதியதாக அஞ்சலகம் துவக்க வேண்டும் அல்லது ஏற்கனவே மயிலாடுதுறையில் மூடப்பட்ட கிளை அஞ்சலகங்களில் பணியாற்றுவர்களை கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தபால் பட்டுவாடா இல்லாத  அஞ்சலகம் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மயிலாடுதுறை மக்களின், மக்கள் தொகைக்கு ஏற்ப அஞ்சலகங்கள் பல இடங்களில் செயல்படுவது உறுதிப்படுத்தப்படும். இது குறித்து அவசியநிலையை புரிந்து கொண்டு  மாவட்ட ஆட்சியர் மகாபாரதியும், சம்பந்தப்பட்ட தபால்துறை உயர் அலுவலர்களோடு உடனடியாக தொடர்பு கொண்டு புதிய அஞ்சலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைத்திட முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கேட்டுக்கொண்டுள்ளார்..
Previous Post Next Post