சஹ்யாத்திரி மலையில் ஜோதிர்லிங்க தரிசனம்... எளியோருக்கு எளியோனாய் அருள் தரும் பீமாசங்கரம்!!

 மஹாராஷ்டிர மலைக்காடுகளில் ஒரு மறக்க முடியாத பயணம்...   பீமராத்தி நதியில குளிக்குறதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு... சஹ்யாத்திரி மலையில் ஜோதிர்லிங்க தரிசனம்... எளியோருக்கு எளியோனாய் அருள் தரும் பீமாசங்கரம்!!

மலையெல்லாம் குடிகொண்டு இருக்குற அபிஷேகப்பிரியன் அய்யன் சிவபெருமான தரிசனம் பண்ணுறதே நமக்கு வாழ்க்கைல கிடைச்ச மிகப்பெரிய வரம்... அதுலயும் ஜோதிர்லிங்கமாய் எழுந்தருளி எளியோருக்கு எளியவனாய் காட்சி தர்ற அவர பார்க்குறதுக்கு 1500 கி.மீ., தூரம் கடந்து போய் வர்ற வாய்ப்பு நமக்கு கிடைச்சா வரப்பிரசாதம் தானே..

நிச்சயமா அதுதாங்க உண்மை... 12 ஜோதிர்லிங்கமா காட்சிதர்ற நம்ம சிவபெருமான், ஆறாவது ஜோதிர்லிங்கமா அருள்பாலிக்குற இடம் தாங்க மஹாராஷ்ட்ரா மாநிலத்துல புனே பக்கத்துல இருக்குற பீமாசங்கரம்.. இத அந்த ஊர்க்காரங்க பீமாசங்கர் மலைன்னு சொல்றாங்க..மலைக்காட்டுல ஒரு பயணம், அமைதியான தரிசனம்னு பீமாசங்கரம் போயி, தரிசனம் பண்ணிட்டு வர்றது மனசுக்கு ரொம்ப இதமான விஷயம்.. 

சரி பீமாசங்கரம் அப்படிங்கற இந்த கோவிலோட வரலாறு அப்டின்னு பார்த்தோம்னா, முன்னதொரு காலத்துல, கும்பகருணனின் பல மனைவிகளில் ஒருத்தியான கற்கடி’க்கு பீமன்னு ஒரு மகன் இருந்தாராம்.. பீமன் பிரம்மனை நோக்கி கடுமையான தவம் இருந்து பிரம்மண்ட்ட ஒரு வரம் வாங்கி பெரிய பலசாலியா ஆயிடுறாரு... அப்புறமா பூவுலக மன்னர்களைஎல்லாம் ஜெயிச்சுட்டு, , இந்திர லோகத்து மேலயே படையெடுத்து அவர்களையும்ஜெயிச்சுட்டாரம்... இதனால பீமனுக்கு பயந்த தேவர்கள் எல்லாம் இந்த வனப்பகுதில வந்து நம்ம சிவபெருமான நோக்கி தவமிருந்து இந்த பீமன்கிட்ட இருந்த காப்பாத்த கேட்டுருக்காங்க.. இது ஒருபக்கம் நடந்துட்டு இருக்க.... காமரூப நாட்டு அரசனும், சிவபக்கனுமா இருத்ந பிரியதருமன்ங்கறவர போர்ல ஜெயிச்ச பீமன், அவரை தூக்கி ஜெயில்ல போட்டு கொடுமை பண்ணுனாரம்.. பிரியதருமனும் அவரோட மனைவியும் ஜெயில்லயே சிவலிங்கம் வச்சு சிவபூசை பண்ணிட்டு வந்துருக்காங்க.. இதைக்கேட்ட பீமன் தன் சூலத்தை எடுத்துட்டு போய் பிரியதருமன் மேல வீச... அந்த டைம்ல சிவலிங்கத்துல இருந்து வந்த  சிவபெருமான் நெற்றிக்கண்ணால பீமன எரிச்சு அழிச்சாராம்.. . அப்புறம் அந்த இடத்துலயே சிவபெருமான் ஜோதிர்லிங்கமா இருந்து பக்தர்களை காத்துட்டு இருக்கார்... 

இப்படி ஒரு சிறப்பு மிக்க இந்த பீமாசங்கர் ஜோதிர்லிங்க கோவில்ல பல ஆயிரம் வருஷமா வழிபாடுகள் நடந்துட்டு வருதுங்க... 12 ஜோதிர்லிங்க தலங்கள்ல ஆறாவது ஜோதிர்லிங்கமா இருக்குற இங்க, வடமாநில மக்கள் மட்டுமில்லாம நம்ம ஊரு பக்தர்களும் ஏராளமா போய் சாமி கும்பிட்டு வர்றாங்க..

இந்த கோவிலுக்கு வந்து இங்க இருக்குற  பீமராத்தி  அருவிலயும், சின்ன ஆறுலயும் குளிச்சிட்டு பீமாசங்கர கும்பிடுறதால தீமைகள் எல்லாம் விலகும்னு நம்புறாங்க...

பீமாசங்கரத்தோட ஸ்பெஷாலிட்டின்னு பார்த்தா இது மட்டும் இல்லீங்க.. இன்னமும் இருக்கு, நம்ம கன்னியாகுமரில ஆரம்பிச்சு குஜராத் வரைக்கு1500 கி.மீ., தூரத்துக்கும் மேல பரந்து விரிஞ்சு கிடக்குற மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்ல, மஹாராஷ்ட்ரா மாநிலத்துல சஹ்யாத்ரி மலைகள்ல தான் பீமாசங்கரம் இருக்கு... 

மஹாராஷ்ட்ர மாநிலம் புனேல இருந்து நாசிக் போற நெடுஞ்சாலைல கெத்’ங்கற (khed) ஊருக்கு பக்கத்துல இருக்கு இந்த மலைகள்... சும்மா வளைஞ்சு நெளிஞ்சு போற மலைவழிச்சாலைல, ஒய்யாரமா ஒரு பயணம்.. காடு, மலை, கல், மண்ணு, அருவின்னு ரசிச்சுக்கிட்டே போகலாம்... அருமையான ஒரு இயற்கை பயணம்ங்க இது... புனேவில இருந்து பைக்ல போனோம்னா சுமாரா ஒரு 3 மணி நேர பயணம்... ஜாலியா பராக்கு பார்த்துக்கிட்டே போகலாம்.. ஆனா கவனமா போகணும், அதையும் நியாபகம் வச்சுக்கோங்க...

மலைக்காடுகள ரசிச்சுக்கிட்டே போய்.., பீமா சங்கர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல வண்டிய நிறுத்திட்டு, மலைவழிப்பாதைல மரங்களுக்கு இடையில இறக்கத்துல நடந்து போகணும்.. அங்க கேட்டாலே குப்த் பீமாசங்கர் போறதுக்கு வழிய கை காட்டுவாங்க... ரெண்டரை கி.மீ., தூரம் நடந்து போணோம்னா  குப்த பீமாசங்கரம்னு சொல்ற அருவில் வருது. சின்ன அருவி... அழகா ரொம்பி வழியுது... சத்தமில்லாத காட்டுக்குள்ள சலசலக்குற தண்ணில ஜாலியா குளிக்கலாம்.. கொஞ்ச நேரம் குளிச்சிட்டு, அங்கயே இருக்குற குப்த பீமாசங்கர லிங்கத்துக்கு அருவித்தண்ணில அபிஷேகம் பண்ணிட்டு கிளம்பி கோவிலுக்கு வரலாம்... அதே நடைபாதைதான் அருமையா இருக்கும் நடந்து வரலாம்.. அருவில இருந்து ரெண்டு மூணு ஒத்தையடி பாதை போறதால கவனமா திரும்பி வரணும்.. வந்தோம்னா பீமாசங்கரம் கோவிலுக்கு நேரா வரலாம்.. 

கோவில் பக்கத்துலயே மோட்ச குண்டம் இருக்கு.. இங்க இருந்து தீர்த்தம் எடுத்துக்கலாம்... அருவிக்கு போகாம நேரடியா கோவிலுக்கு வர்றதுக்கு வெறும் அஞ்சு நிமிஷம் நடந்தாலே போதும்... இயற்கையான இடம்.. கான்கிரீட் நடைபாதை இருக்கு.. அத மாத்தி இப்போ கல் பாதை அமைச்சுட்டு இருக்காங்க.. கோவிலுக்கு வந்தோம்னா, அழகான கற்கோவில் கட்டிருக்காங்க.. 1300 வது வருஷத்துக்கு முந்தைய வரலாறு இருந்தாலும் 1700கள்ல கட்டுன கோவில் கட்டிடம் தான் இப்போ இருக்கு.. நாகரா கட்டிடக்கலை ஸ்டைல்ல கட்டிருக்காங்க.. நம்ம ஊரு கோவில்கள் மாதிரி நிறைய சிற்பங்கள் எல்லாம் இல்ல..  சிம்பிளா சதுரமான கருவறைமேல கூம்பு வடிவ கோபுரம் கம்பீரமா இருக்கு.. சுத்தி வந்து உள்ளே போகலாம்.. கோவில் உள்பிரகாரத்துல லிங்கவடிவமா இருக்குறாரு.. சிவனும் பார்வதியுமா அர்த்தநாரீஸ்வர அவதாரம்.. பெரும்பாலான நேரத்துல வெள்ளிக்கவசம் சாத்திருக்காங்க... 

கூட்டம் இல்லாத நேரங்கள்ல அபிஷேகம் பண்ணலாம்.. கூட்டம் இருந்தாலும் உள்ளே போய் தொட்டு தரிசனம் பண்ண அனுமதிக்குறாங்க..மனசார சாமி கும்பிடலாம்.. கர்ப்பகிரக செவுத்துலயே பார்வதி தேவியும் அருள்பாலிக்குறாங்க... ஆனந்தமா கும்பிட்டுட்டு வெளியே வந்தோம்னா முன் மண்டபத்துல ஆமை சிலை வச்சுருக்காங்க... கோவிலுக்கு எதிரில் சனி பகவான் இருக்கார். அவருக்கு பின்னாடி ரெண்டு நந்தி அருள்பாலிக்குறாங்க.. எல்லோரையும் கும்பிட்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரலாம்..சனிபகவான் பக்கத்துல பிரம்மாண்ட மணி ஒன்னு கட்டிருக்காங்க.. 1720கள்ல, பாஜிராவ் பேஷ்வாவோட சகோதரரான சிம்னாஜிங்கறவர் தான் போர்த்துக்கீசியர ஜெயிச்சு இந்த பிரம்மாண்ட மணிய இங்க கொண்டு வந்து கட்டிருக்காரு... இந்த கோவில 18ம் நூற்றாண்டுல நானா பட்னாவிஸ் புதுப்பிச்சுருக்காரு...

கோவிலுக்கு போற வழியெல்லாம் சின்னச்சின்ன கடைகள் இருக்கு.. நாங்க போன நாள் எல்லாம் பூட்டிருந்தாங்க... 

இப்படி ஒரு புராணச்சிறப்பு மிக்க இடமாவும், இயற்கை வளம் நெறஞ்ச இடமாவும் இருக்குற பீமாசங்கரம் போகணும்னா, நாம மொதல்ல தமிழ்நாட்டுல இருந்து புனேவுக்கு வந்துரணும்.. நம்ம சென்னை, கோவை பக்கம் இருந்து புனே வர்றதுக்கு டிரெயின் இருக்கு.. 24 மணி நேரத்துல வர முடியுது...  புனே, சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து காலைல 5 மணிக்கு பஸ் இருக்கு... 120 கிலோ மீட்டர் தூரத்த நாலு மணி நேரத்துல இருந்து 5 மணி நேரம் பஸ் ட்ராவல் பண்ண வேண்டி வரும்... 

இங்க இருந்து பைக் ரெண்டல் எடுத்துட்டும் போகலாம்.. மலைப்பயணம் தானே நல்லாருக்கும்.. மழைக்காலம்னா இந்த சஹ்யாத்ரி மலை எல்லாம் பச்சை பசேல்னு செம்மையா இருக்கும்...அதே மாதிரி பீமாசங்கரத்துல இருந்து திரும்பி வர்றதுக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு கடைசி பஸ் இருக்கு... ஒரு பகல்ல இங்க சுத்திப்பார்த்துட்டு, மனசு நெறய சாமி கும்பிட்டுட்டு வரலாம்... பீமாசங்கர மலைல ஒன்னு ரெண்டு சின்ன ஹோட்டல் தான் இருக்குறதால புனேலயோ இல்ல நாசிக்லயோ தங்கிக்குறது நல்லது.. நாசிக் ல இருந்தும் இங்க வந்து போறதுக்கு பஸ் வசதி இருக்கு.. இதுக்கு 130 கி.மீ., தூரம் டிராவல் பண்ண வேண்டி வரும்.. 

மஹாராஷ்ட்ரால எங்க போனாலும் 10 கடைக்கு ஒரு கடைல தோசை கிடைக்கும்.. ஏதோ கிடைக்குதேன்னு சாப்ட்டுக்கலாம்.. அவ்ளோ குவாலிட்டி, டேஸ்ட் எல்லாம் எதிர்பார்க்க முடியாது.. புனே ரெயில்வே ஸ்டேஷன் ஆப்போசிட்ல இருக்குற சாகர் ஹோட்டல்ல இட்லி, தோசை, பூரின்னு நம்ம ஊர் ஃபுட் ஐட்டம் எல்லாம் நல்லாருக்கு.. வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க...

மஹாராஷ்ட்ரா பக்கம் வந்தாச்சு, அப்படியே நாசிக்ல இருக்குற த்ரிகம்பேஸ்வரர் ஜோதிர்லிங்கம், அவுரங்காபாத்ல இருக்குற கிருஷ்ணேஷ்வர் ஜோதிர்லிங்கம், அப்புறம் ஷீரடி சாய்பாபா கோவில், மந்த்ராலயம் எல்லாம் பார்த்துட்டு வரலாம்..  இதுக்கெல்லாம் ஒரு வாரம் இருந்தா ரொம்ப அதிகம்... நீங்களும் அப்படியே ஒரு விசிட் போயிட்டு வாங்களேன்..

Previous Post Next Post