50 ஆயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்த அற்புத சிவஸ்தலம்.. குஜராத் சோமநாதர் கோவில்!

 ஆறுமுறை இடிக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும் மீண்டெழுந்த ஜோதிர்லிங்க கோவில்..  50 ஆயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்த அற்புத சிவஸ்தலம்.... சந்திரனுக்கே சாபவிமோசனம் தந்த சிவன்கோவில்... இப்படி பல பெருமைகளை வச்சுட்டிருக்கிற ஒரு அருமையான ஜோதிர்லிங்க கோவில் தாங்க, குஜராத் மாநிலத்துல இருக்குற சோம்நாத் ஜோதிர்லிங்க கோவில்...

சோம்நாத் ஜோதிர்லிங்க கோவில் அப்படின்னு சொன்னாலே பாவங்கள் தீர்க்கும் ஜோதிர்லிங்க கோவில் அப்படிங்கற விஷயமும், இந்த கோவில இடிச்சு துவம்சம் பண்ணின கஜினி முகமதுவும் தன் நியாபகத்துக்கு வருவாங்க...

இந்த கோவில் சந்திரனால் கும்பிடப்பட்ட கோவில் அப்படின்னு சொல்லும்போதே இந்த கோவில் பத்தின முக்கியத்துவம் நமக்கு தெரிய வருது. முந்தைய யுகத்துல 27 நட்சத்திரங்களும் சந்திரனுக்கு மனைவியரா இருந்திருக்காங்க.. இதுல கடைசி மனைவியா இருக்குற ரோகினி மேல மட்டும் சந்திரன் பாசமா இருந்தாராம்.. இதனால மற்ற 26 மகள்களும் அவங்களோட அப்பாவான தட்சன் கிட்ட போய் இது பத்தி சொல்லிருக்காங்க.. உடனே கோபமான தட்சன், சந்திரனுக்கு ஒரு பெரிய சாபத்தை கொடுத்திடுறாரு.. அந்த சாபத்தினால தொழுநோயால பாதிக்கப்பட்ட சந்திரனோட அழகு எல்லாம் போய் தேஞ்சுக்கிட்டே போனாராம்... சாபம் தீரணுங்கறதுக்காக, இப்போ சோம்நாதர் கோவில் இருக்குற பிரபாதீர்த்தத்துல நீராடி, சிவபெருமான இந்த இடத்துல கும்பிட்டாராம். அதனால அவரோட சாபம் நீங்கி மறுபடியும் வளர்பிறை சந்திரனா ஜொலிக்க ஆரம்பிச்சாராம்.. 

அதுக்கப்புறம் சிவபெருமானும் சந்திரன எடுத்து தன் தலையில சூடி முதல்முறையா பிறைசூடி நின்ற பெருமானா காட்சி தந்திருக்கார்... இப்படி சந்திரனால் வழிபடப்பட்டு சாபம் நீங்கப்பெற்ற அருமையான அற்புதமான கோவில் தாங்க குஜராத்ல அரபிக்கடலோரம் இருக்குற சோமநாதர் கோவில்... முதலாவது ஜோதிர்லிங்கமா கருதப்படுற இந்த கோவில், பல யுகங்களை கடந்த கோவிலா இருக்குங்க.. அது மட்டுமில்லாம பஞ்சபாண்டவர்களும் இங்க வந்து சாமி கும்பிட்டு இருக்காங்க அப்படின்னு சொல்லப்படுது. இதுமட்டுமில்லாம பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூட இந்த பிரபாசபட்டினத்துல தான் தன்னோட அவதார முடியற காலத்துல தங்கி இருந்தாராம்.. அப்போ ஒரு வேடுவனோட அம்புல காலில் காயம்பட்டு விண்ணுலகம் போயிட்டாருன்னு சொல்றாங்க...

 இப்படிப்பட்ட சிறப்பு மிக்க சோம்நாதர் கோவில் பார்த்தோம்னா பல ஆயிரம் வருஷமா செல்வச்செழிப்பு மிக்க கோவிலா இருந்துருக்குங்க.. சிவபெருமான உசுரா நினைச்சு கும்பிட்ட மக்கள் இந்த கோவில சுத்தி இருக்குற 12 ஆயிரம் ஊர்கள்ல இருந்து வந்து விழா எல்லாம் நடத்துவாங்களாம். சோமநாதர் மேல இருக்குற பக்தில அரபிக்கடலோரம் இருக்குற இந்த சோமநாதபுரமே பல ஆயிரம் வருஷங்களா செல்வச்செழிப்பா இருந்துருக்குங்க... இந்த பகுதில இருக்குற பல நாட்டு அரச வம்சத்தினரும், வணிகம் செய்யுற மக்களும் பணம், நகைன்னு சோமநாதருக்கு எக்கச்சக்கமா காணிக்கைகள அள்ளி அள்ளி கொடுத்துருக்காங்க.. இதனால சோமநாதர் கோவில் பொக்கிஷக் கருவூலமாவே மாறி இருந்துருக்குங்க...

இப்படி குஜராத் கடற்கரைல இருக்குற ஒரு கோவில் செல்வச்செழிப்போட இருக்குறது ஆப்கானிஸ்தான் நாட்டுல இருந்த கஜினி முகமதுக்கு தெரியவர, 1028 வது வருஷம் படை எடுத்து வந்து கோவிலை துவம்சம் பண்ண ஆரம்பிச்சுருக்கான். சிவபக்தில சிறந்த அந்த ஊர் மக்கள் எல்லாம் சாரை சாரையா வந்து தடுத்துருக்காங்க.. பலபேர் உயிரை விட்டாலும் தடுக்க வர்றவங்க எண்ணிக்கை குறையல... இந்த போராட்டத்துல கஜினி முகமது படையோட ரத்தவெறிக்கு 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்காங்க.. இது தவிர 20 ஆயிரம் பேர அடிமையா இழுத்துட்டு போனானாம் கஜினி முகமது.. இது மட்டும் இல்லாம கோவில்ல இருந்த மிதக்குற சிவலிங்கம் எல்லாம் உடைச்சு, கோவில் கதவுகள், நகைகள், வைர, வைடூரியங்கள்ன்னு 7 வண்டில எல்லாப்பொருட்களையும் அள்ளிட்டு போயிருக்கான். அப்போதைய மதிப்பே 2 கோடி தினார்ன்னா பாருங்க.. இப்போதைய மதிப்புக்கு பல லட்சம் கோடி பொக்கிஷம் அது... மரணவேட்டை நடத்தி கொள்ளைக்கு அப்புறமும் மக்கள் இங்கு காணிக்கையா பொக்கிஷங்கள கொண்டு வந்து குவிச்சதால, மறுபடி மறுபடி வந்து கொள்ளையடிச்சுட்டு போயிருக்கான்னா பாருங்களேன்..

இப்படி 50 ஆயிரம் பேர் உயிர்த்தியாகம் பண்ணுனாலும், சிந்து ஆளுநர் ஜூனாயத்து, கஜினி முகமது, அலாவுதீன் கில்ஜி, ஜூனாகத் சுல்தான் முசாபர் ஷா, முகமது பேக்டா அப்புறம் அவுரங்கஷீப் வரைக்கும் இந்த கோவில இஷடத்துக்கு இடிச்சு தள்ளிருக்காங்க... அதே நேரம் இந்த கோவில ஒருத்தர் இடிச்சுட்டு போனாலும், இந்த பக்கம் பிரம்மாண்டமா கட்டிக்கிட்டே இருந்துருக்காங்க... சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னர், கூர்சர பிரதிஹர வம்சத்தின், இரண்டாம் நாக பாதர் மன்னர், 1042 ல போஜராஜனும், பட்டான் நாட்டு சோலங்கி மன்னர், 1308 -இல் சூதசமா வம்ச அரசன் மகிபாலன், 1783 -இல் இந்தூர் நாட்டு அரசி அகல்யாபாய் ஹோல்கர்,  நாக்பூர் மன்னர் இராஜா போன்ஸ்லே, கோலாப்பூர் மன்னர் சத்ரபதி போன்ஸ்லே,  குவாலியர் மன்னர் ஸ்ரீமன் பாடில்புவா ஷிண்டே எல்லாம் இந்த கோவில மறுபடி கட்டுனவங்க... கடைசியா 1951 ல இந்த கோவில கட்ட ராஜேந்திர பிரசாத் அடிக்கல் நாட்டினாரு, 1995 ல சங்கர் தயாள் சர்மா திறந்து வச்சுருக்காரு... 

இப்போ பாருங்க... அரபிக்கடலோரத்துல, பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டமா இருக்கு சோம்நாத் கோவில்.. நாடு முழுக்க இருந்து இந்த கோவிலுக்கு தீர்த்த யாத்திரையா மக்கள் வந்துட்டு போறாங்க.. சாளுக்கிய கட்டிடடக்கலை முறைப்படி கட்டி இருக்குற இந்த கோவில் 115 அடி உயரத்துல கம்பீரமா இருக்குங்க... 10 டன் எடைல  கோபுர கலசம் வச்சுருக்காங்க... 37 அடி உயர கொடிமரமும் அமைச்சருக்காங்க.. 

ஏராளமான சிற்பங்கள் இருக்கு.. மூலவரா சோம்நாதர் இருக்காரு... சிறப்பா கோவில் நிர்வாகம் பண்ணுறாங்க.. அந்த கடலோர காத்துல, பிரம்மாண்ட கோவில்ல உள்ளே போய் ஜோதிர்லிங்கமா இருக்குற சோமநாதரையும், பார்வதி தேவியையும் கும்பிடுறது ரொம்ப ஆனந்தமான விஷயம் தாங்க..  சக்தி பீட கோவிலாவும் இந்த கோவில் இருக்கு.. தேவியோட வயிற்றுப்பகுதி விழுந்த இடமு இது தாங்க... ஒரே கோவில்ல ஜோதிர்லிங்கமாவும், சக்தி வடிவமாவும் அம்மையப்பன தரிசனம் பண்றது யாருக்குத்தான் சந்தோஷம் தராது.ரொம்ப விலாசமான இந்த கோவில்ல சாமி கும்பிட்ட்டு வெளிப்பக்கம் வந்து அரபிக்கடலோரம் உட்கார்ந்து கடலையும், கோபுரத்தையும் பார்த்து ரசிக்குறது ரொம்ப ஆனந்தமாவும், நிம்மதியாவும் இருக்குது... 

அப்படியே கோவிலுக்கு வெளிப்பக்கம் வந்தோம்னா... எதிர்லயே இருக்குறது தான் பழைய சோமநாதர் கோவில்.. இந்த கோவிலயும் நல்லா மேம்படுத்தி கட்டிருக்காங்க.. பழமை மாறாம அந்த கால கல் கோவில அப்படியே வச்சுருக்காங்க.... நிலவறைக்கு கீழ் தளத்துல பழைய சோமநாதர் இருக்காரு... இந்த கோவில்ல நாமளே உள்ளே நேரடியா போய் சாமிக்கு பால், வில்வம், தீர்த்தம்னு எல்லாத்துலயும் அபிஷேகம் பண்ணலாம்.. அதுக்கும் வாய்ப்பு தர்றாங்க.. சாமி கும்பிட்டுட்டு முன்னாடி வந்தோம்னா இந்த கோவில 1700கள்ல ஆறாவது முறையா கட்டுன இந்தூர் மகாராணி அஹல்யாபாய் ஹோல்கர் சிலையும் வச்சுருக்காங்க.. கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பலாம்..

சரி,, சோமநாதர் கோவிலுக்கு எப்படி வர்றதுன்னு பார்த்தோம்னா... சென்னைல இருந்து குஜராத் தலைநகரா இருக்குற அஹமதாபாத்துக்கு டிரெயின்ல வந்துரணும்... இதுக்கு டிரெயின்ல வர்றதுக்கு சுமாரா 30 மணி நேரம் ஆகுது... இதுக்கு நம்ம ஊர்ல இருந்து டெய்லி டிரெயின் இருக்கு... அஹமதாபாத்ல இருந்து  வேரவல் அப்டிங்கற ஸ்டேஷனுக்கு வரணும்.. இதுக்கும் டெய்லி நெறய டிரெயின் இருக்குங்க...சுமாரா 8ல இருந்து 10 மணி நேரம் ட்ராவல் பண்ணி வரணும்....  

வேரவல் ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டு வெளில வந்தோம்னா நிறைய ஆட்டோ இருக்கு.. 50 ரூபாய்ல இருந்து 100 ரூபாய்ல  திரிவேணி சங்கமம் வந்துடலாம்... ஹிரன்ய நதியும், கபிலநதியும் சங்கமம் ஆகுற இடம் இது.. கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதியும் சங்கமம் ஆகுற இந்த இடம் திரிவேணி சங்கமம்னு சொல்றாங்க.. பாவம் தீர்க்குற இந்த திரிவேணி சங்கம தீர்த்ததுல குளிச்சுட்டு சோமநாதர கும்பிட வர்றது சிறப்புன்னு சொல்றாங்க.. குளிச்சிட்டு மறுபடியும் ஆட்டோ பிடிச்சு கோவில் வாசலுக்கு வந்துடலாம்.. கோவில் இருக்குற இந்த ஏரியால நெறைய ரூம்ஸ் இருக்கு.. 300 ரூபாய்ல இருந்து கிடைக்கும்.. இங்க வந்தும் கூட குளிச்சு ரெடி ஆயிட்டு சாமி கும்பிட போகலாம்.. 

இவ்ளோ தூரம் வந்தாச்சு குஜராத் வரைக்கும் வந்தாச்சு வேற என்ன எல்லாம் பார்க்கணுமோ பாத்துரலாமே அப்படின்னு நினைச்சீங்கன்னா.... குஜராத்ல இருக்குற நிஷ்கலங் மகாதேவ் கோவில், துவாரகைல கிருஷ்ணர் கோவில், ருக்மணி கோவில், நாகேஸ்வர் ஜோதிர்லிங்க கோவில், கிர் காட்டுல சுத்துற சிங்கங்கள், பட்டேல் சிலைன்னு ஒரு வாரத்துக்கு ஜாலியா சுத்திட்டு போகலாம்.. சோமநாதர் கோவிலுக்கு போறத பத்தியோ, இல்ல வேற எதாவது ஜோதிர்லிங்க கோவிலுக்கு போறத பத்தியோ ஏதாவது தகவல் வேணும்னா தயங்காம எங்களுக்கு போன் பண்ணுங்க

Previous Post Next Post