பிரதமர் மோடியின் வாகனத்தில் வந்து விழுந்த செல்போன்... உரியவரிடம் எடுத்து தர சொன்ன மோடி

 பூ வுடன் சேர்ந்து பிரதமர் வாகனத்தில் விழுந்த செல்போனால் பரபரப்பு ஏற்பட்டது. அதை பாதுகாப்பு வீரர்களை அழைத்து உரியவரிடம் எடுத்துக் கொடுக்க சொன்னார் பிரதமர் மோடி.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் பகுதியில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நிகழ்ச்சி நடைபெறும் திடலுக்கு வந்த போது திறந்த வெளி வாகனத்தில் பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என மூவரும் திடலை சுற்றி மேடைக்கு வந்தார்கள். 

அப்போது பிரதமரை வரவேற்கும் விதமாக பாஜக தொண்டர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். அப்போது பூ உடன் செல்போன் ஒன்று பிரதமர் சென்ற வாகனத்தின் மீது வந்து விழுந்தது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பதறினர். 


இதனை கவனித்த பிரதமர் மோடி செல்போனை எடுத்து கொடுக்க சொல்லி சைகை காட்டுகிறார். அதன் பின்னர் செல்போனை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் பாஜக தொண்டர்கள் பூக்களை தூவி பிரதமரை வரவேற்கும் போது அருகில் செல்போனில் படமெடுத்த தொண்டரின் செல்போனை எதிர்பாராத விதமாக தட்டி விட்டதால் செல்போன் தவறி விழுந்ததாக தெரியவந்தது. மேலும் இது போன்ற சம்பவங்களை தவிர்க்க பாஜகவினர் முன்னதாக பூக்களை தூவும் போது செல்போன் போன்ற எந்த பொருளையும் கையில் வைக்க வேண்டாம் என பல முறை ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும் இது போன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. விசாரணையில் செல்போன் தவறி விழுந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து செல்போன் பாஜக தொண்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Previous Post Next Post