தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை உரிமையாளர்கள் பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு!


 தூத்துக்குடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை உரிமையாளர்கள் பட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு! 

தூத்துக்குடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மனை உரிமையாளர்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி வட்டம், சங்கரப்பேரி கிராமம், சர்வே எண்கள் :101,102,103,104, மற்றும் 105/2-ல் உள்ள மொத்தம் ஹெக்டேர் 14.36.0க்கு ஏக்கர் 35 சென்ட் 40 விஸ்தீரணமுடைய நிலம் தூத்துக்குடி முனிசிபாலிட்டிக்கு சொந்தமான குப்பை புதைக்குமிடமாக இருந்து வந்தது. பின்னர் சர்வே எண்கள்.104 மற்றும் 105/2ல் திருவள்ளுவர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேசன்க்கும், காவல்துறைக்கும் ஒதுக்கியது போக மேற்படி சர்வே எண்களில் உள்ள 11.93.5 ஹெக்டேர் (ஏக்கர் 29 சென்ட் 48) நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு தூத்துக்குடி முனிசிபாலிட்டி தீர்மானம் மூலம் ஒப்படைத்தது.

அதன் பின்பு மேற்படி நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் LIG-1, LIG-11, EWS-A, EWS-B, என சுமார் 1050 வீட்டு மனைகள், வணிக வளாகங்கள், சமுதாய கூடம், பூங்கா மற்றும் சிறுவர் பள்ளி முதலியவைகளாக பிரிக்கப்பட்டு 1992ம் ஆண்டு முதல் குலுக்கல் முறையில் பொது மக்களுக்கு விற்பனை செய்தது. அதில் பிளாட் எண். HIG811-ஐ சண்முகம் என்பவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திலிருந்து 16.02.2004 தேதியிட்ட கிரையப் பத்திரம் (ஆவண எண் : : 280/2004) மூலம் கிரையம் பெற்றார். அவரிடமிருந்து நான் மேற்படி சொத்தை 11.04.2008 தேதியிட்ட கிரைய பத்திரம் மூலம் (ஆவண எண்: 1363/2008) கிரையம் பெற்றேன்.

என்னை போன்று இதனடியில் கையொப்பமிட்டவர்களும் மேற்படி பகுதியில் தனித்தனியாக பிளாட்கள் கிரையம் பெற்றுள்ளார்கள். அவ்வாறு கிரையம் பெற்ற பிளாட்டுகளில் பலர் வீடுகள் கட்டியுள்ளார்கள். சில பிளாட்டுகள் காலி மனையாக உள்ளது. இதற்கு முன்னர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திலிருந்து வீட்டு மனைகள் ஒதுக்கீடு ஆணைகளை வைத்தும், கிரைய பத்திரங்களை வைத்தும், முன் சங்கரப்பேரி பஞ்சாயத்து தற்போது உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் மாநகராட்சி ஆணையர் மூலமும் கடந்த 2022ம் ஆண்டு வரை கட்டிட அனுமதி, கட்டிட வரைபட அங்கீகாரம், வங்கி கடன்கள் அனைத்தும் எவ்வித தடையுமின்றி வழங்கப்பட்டு வந்தனர். (உதாரணம் : உள்ளூர் திட்டக் குழுமம், தூத்துக்குடி மாநகராட்சி கட்டிட அனுமதி எண் 00 138/B2/2022/00522, திட்ட அனுமதி எண் 00 122/2022/F1/N2/G0110-GT: 06.12.2022).

பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை தூத்துக்குடி முனிசிபாலிட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்த போதும் தற்போது வரை சங்கரப்பேரி கிராம கணக்கிலும், வருவாய்த்துறை இணையதளத்திலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று பட்டா மாற்றம் செய்யப்படாமல் அரசு புறம்போக்கு குப்பை குவியல் என்றும் இணையதளத்தில் அரசின் நிலம் என்றே உள்ளது. அதனால் நாங்கள் வீடு கட்டுவதற்கு பிளான் அப்ரூவல் விண்ணப்பித்தாலோ வங்கிகளில் கடன் பெற விண்ணப்பித்தாலோ எங்களது பிளாட்டுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பெயரிலும் மற்றும் தற்போதைய

மனை உரிமைதாரர்கள் பெயரிலும் இல்லாததாலும், அரசு புறம்போக்கு என்று உள்ளதாலும் எங்களது விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நாங்கள் கிரையம் பெற்ற பிளாட்டுகளை வேறு நபர்களுக்கு அவசரத்தேவைக்கு கூட விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால், பிளாட்டுகளை கிரையம் பெற்ற நாங்கள் பல இன்னல்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளோம். 

இது சம்பந்தமாக நாங்கள் தங்களிடம் பலமுறை புகார் அளித்திருந்தபோதும் இதுவரை எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, சங்கரப்பேரி கிராமம் சர்வே 101,102,103,104/pt,105/pt எண்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பெயரிலும் மற்றும் தற்போதைய மனை உரிமைதாரர்களின் பெயரிலும் பட்டா மாற்றம் செய்தும், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தும், அதன் அடிப்படையில் பிளாட்டுகள் கிரையம் பெற்ற எங்களது பெயர்களுக்கு பட்டா வழங்கும் படியும் தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தவறும் பட்சத்தில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் பரிகாரம் கோர உள்ளோம் என்ற விபரத்தினை தங்களுக்கு பணிந்து தெரிவித்துக் கொள்கிறோம். என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post