பிளாஸ்டிக் தடுப்பில் அரசு தீவிரம்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி  தலைமையில் தலைமைச் செயலகத்தில், “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு” உருவாக்கிட, தமிழ்நாடு அரசால் ஜனவரி-1, 2019 முதல் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் அறிவிப்பின் மீதான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்த பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆய்வு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படுவது பற்றியும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய ஏற்கனவே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதைப் பற்றியும் விவாதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அரசின் ஆணையை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களை தொடர்ந்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தி, சுற்றுச்சூழலை மீட்டெடுக்க மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. திண்டுக்கல் சீனிவாசன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.பி. தங்கமணி, மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.பி. அன்பழகன், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி. கருப்பணன், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.