பாச மழையில் மழலைகள்: மாணவர்கள் உள்ளம் கவர்ந்த சுபாஷிணி டீச்சர்!

 வாத்தியார், டீச்சர் என்றாலே ஒருவித பயம் அவர்களையும் அறியாமல் பிள்ளைகளுக்கு வந்துபோகும்! அதுவும் தொடக்கப்பள்ளிகளில், மிரள மிரள பிள்ளைகள் உட்கார்ந்திருப்பார்கள். இதைதான் உடைத்தெறிந்து வருகிறார் சுபாஷினி


புதுச்சேரி நோனாங்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது அரசு தொடக்கப் பள்ளி. இங்கு வேலை பார்த்து வருகிறார் சுபாஷினி. டீச்சர் வேலை என்றால் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அதிலும் கிளாஸ் ரூமில் பிள்ளைகள் சிரித்து கொண்டும், விளையாடி கொண்டும் இருக்கிறார்கள் என்றால் இவருக்கு கொள்ளை பிரியமாம்.


அதற்காக அங்கே பாட போதனையே நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. வாசித்தல் என்பதை வகுப்பறைக்குள் அடைத்துவைக்க சுபாஷினி விரும்பவில்லை. வகுப்பறை சூழலுக்குள் அந்த மாணவ பிஞ்சுகளை எப்படி பழக்கப்படுத்துவது என்பது குறித்துதான் யோசித்தார் சுபாஷினி.


#ஊக்குவிப்பு
க் - க் = கொக்கு, ங் - ங் = சங்கு என்று தொடங்கியது படிப்பு. மாணவர்கள் ஆர்வத்துடனும், ஆசையுடனும் லயித்து படிக்க ஆரம்பித்தார்கள். வெறும் படிப்பு மட்டுமல்லாமல், அவர்களது திறமைகளையும் ஊக்குவிக்கும் பொறுப்பையும் ஏற்றார் சுபாஷினி. பிள்ளைகள் வகுப்பில் ஓவியம் உட்பட அனைத்து கைவேலைகளையும் இறக்கி சபாஷ் வாங்குகிறார்கள்.


#குட்மார்னிங்
காலையில் வகுப்பு தொடங்குவதே வித்தியாசமாக உள்ளது. "குட் மார்னிங்" என்று ஆசிரியர்களுக்கு ஒரு வணக்கத்தை வழக்கமாக வைக்காமல், சுபாஷினி புது முயற்சியை செய்துள்ளார். அதன்படி, வகுப்பறையில் மழலைகள் வரிசையில் நின்றபடி உள்ளே நுழைகிறார்கள்


#டான்ஸ்_ஆடுகிறார்கள்
அங்கு ஒரு நோட்டீஸ் போர்ட்டில், சில படங்கள் வரைந்து வைக்கப்பட்டுள்ளது. அதில் கட்டிப்பிடித்தல், நடனம் ஆடுதல் போன்று வரையப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் உள்ளே நுழைந்து தங்கள் விருப்ப சாய்ஸ் எது என்று அந்த போர்டில் கை வைத்து சொல்கிறார்கள். நடனம் என்பதை தொட்டவுடன், அந்த குழந்தையுடன் சேர்ந்து சுபாஷினியும் ஒரு சின்ன ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடி பிள்ளைகளை வரவேற்கிறார்.


#பாசமான_டீச்சர்
கட்டிப்பிடித்தல் என்ற ஆப்ஷனை தொட்டால், பிள்ளைகளை இறுக்கமாக பாசத்துடன் கட்டிப்பிடித்து வரவேற்கிறார். பிள்ளைகளுக்கு எது விருப்பமோ அதை சலிக்காமல், சளைக்காமல் செய்கிறார் இவர். எத்தனை பிஞ்சுகள் வரிசையில் நின்றிருந்தாலும், எல்லோரது ஆசையையும் நிறைவேற்றி, குஷிப்படுத்திவிட்டுத்தான் பாடத்தையே ஆரம்பிக்கிறார். அதனால்தான் சுபாஷினி டீச்சர் வகுப்பறையில் எப்பவுமே சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது!


Previous Post Next Post