சென்னையில் காதலர்க்கு அருளும் முருகன் கோவில் 

தமிழ் மக்களின் பெரும் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானுக்கு நிறைய கோவில்கள் இருக்கின்றன. ஆனால் சென்னைக்கு அருகில் உள்ள குன்றத்தூர் குமரன் தான் காதலர்க்கு அருளும் ஆபத்பாந்தவனாக அருள்பாலிக்கிறார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய், தானே குறத்தி பெண்ணான வள்ளியை காதலித்து திருமணம் செய்த முற்போக்கு கடவுள் முருகனது குன்றத்தூர் மலை, சினிமா சூட்டிங்குகளுக்கு மட்டும் இல்லாமல் நிஜத்திலும், காதல் திருமணங்கள் ஏராளமாக நடந்தேறும் முக்கிய  தலமாக விளங்குகிறது. சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த பலரது காதல் திருமணங்கள் இங்கு தான் நடந்தேறி உள்ளன. இன்னமும் நடந்து வருகின்றன. . அதே நேரத்தில் பெற்றோர் பார்த்து வைத்து நடத்தும் திருமணங்களும் இங்கு ஏராளமாக நடக்கிறது. ஆக மொத்தம் தம்பதியருக்கு அருள்பாலிக்கும் அன்புக்கடவுளாக வீற்றிருக்கிறார் குன்றத்தூர் குமரன். இந்த மலையில் உள்ள அரச மரத்தின் கிளைகளில் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி தொட்டில்கள் கட்டியதன் வாயிலாக குழந்தை வரம் கிடைத்துள்ளது என்கிறார்கள். இங்குள்ள வில்வ மரத்தடியில் வில்வ விநாயகர் வீற்றிருக்கிறார். அவரை வழிபட்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். என்பதும் சென்னை வாசிகளின் நம்பிக்கை. குன்றத்தூரில்  முருகன் வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பது மிகவும் விசேஷமானது. ஏனென்றால் வடக்கு திசை நோக்கியவாறு தமது திருமுக மண்டலத்தை வைத்துள்ள திருத்தலம் தமிழக அளவில் குன்றத்தூர் மட்டும்தான்.பாடல் பெற்ற இத்தலத்தில் மூலவர் சுப்பிரமணியருக்கு நடத்தப்படும் அபிஷேக விபூதிதான், தினமும் அனைவருக்கும் பிரசாதமாக தரப்படுகிறது.குன்றத்தூரானது பெரியபுராணம் படைத்த சேக்கிழார் பிறந்த ஊர். எனவே மலை அடிவாரத்தில் அவருக்கு தனி சன்னிதி உள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் சேக்கிழார் குரு பூஜையின் போது மலையில் இருந்து முருகன் இறங்கி வந்து சேக்கிழாருக்கு காட்சி தருவது ஐதீகமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இங்கு முருகன் பூஜித்த கந்தழீஸ்வரர் கோவிலும் உள்ளது. சென்னை பிராட்வேயிலிருந்து 30 கி.மீ., தூரமும், பூந்தமல்லியிலுருந்து 7 கி.மீ., தொலைவிலும் உள்ளது குன்றத்தூர் கோவில்.