வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து வேப்பூரில் விசிக வினர் திடீர் சாலை மறியல்


வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து வேப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது அதில் ஒரு தரப்பினர் அங்கிருந்த அம்பேத்கர் சிலையை உடைத்தனர். மேலும் ஜிப் தீ வைத்து கொளுத்தப்பட்டது. போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் 103 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வேப்பூர் கூட்டு ரோட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் சிறு நெசலூர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். 



இதற்கு நல்லூர் ஒன்றிய செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் திராவிடமணி, சாண்டில்யன் ,அர்ஜுனன், சக்திவேல், சிறு நெசலூர் ரமேஷ் மாநில, மாவட்ட ,ஒன்றிய ,கிளை நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்பேத்கர் நற்பணி மன்றத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் சிலையை உடைத்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.


Previous Post Next Post