வேப்பூர் அருகே ஈச்சர் லாரியில் சுமை ஏற்றி வந்த ஓட்டுநருக்கு திடீர் என ஏற்பட்ட வலிப்பு
 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு ஈச்சர் லாரியை திருச்சி நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்தார். வேப்பூர் அடுத்த  பில்லூர் கைகாட்டி அருகே லாரி ஓட்டிக் கொண்டு வரும் போது நாராயணன் தனக்கு வலிப்பு வரப் போவதை உணர்ந்து உடனடியாக சாலையோரம் லாரியை நிறுத்தி ஓட்டுநர் இருக்கையில் படுத்துக் கொண்டார்.

 


 

அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் லாரி ஓட்டுநர் வாயில் நுரை தள்ளியவாறு வலிப்பு வந்து அவதிப்பட்டு கொண்டிருப்பதை பார்த்ததும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மயங்கிய நிலையில் இருந்த நாராயணனை சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். லாரி ஓட்டுநர் நாராயணன் தனக்கு வலிப்பு வரப்போவதை உணர்ந்து சாலையோரம் லாரியை நிறுத்தியதால் அங்கு ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.