சாராய ஊரல் அழிப்பு


உள்ளாட்சி தேர்தலுக்காக ஓட்டு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே டாஸ்மாக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சந்தடி சாக்குகளில் கள்ளச்சாராயத்தை வாங்கி பயன்படுத்த பலரும் சாராய வியாபாரிகளுக்கு லிட்டர் கணக்கில் ஆர்டர் கொடுத்துள்ளனர். இப்படி ஆர்டர் பெற்ற சாராய வியாபாரி ஒருவர் போளூர் வனச்சரகம் மூலக்காடு காட்டுப்பகுதி ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார்நிலையில் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போளூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பாரஸ்டர்கள் பாலசுப்பிரமணியம் கோவிந்தன் கார்டுகள் பழனி, விஜயகுமார், சந்திரசேகர், பெருமாள் உள்ளிட்ட துப்பாக்கி ஏந்திய வனத்துறையினர் மூலக்காடு காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோதனைக்கு சென்றனர். அப்போது ஒரு இடத்தில் சாராயம் காய்ச்சுவதற்கான அடுப்புகள் ஊரல் தயார்நிலையில் இருந்தன. வனத்துறையினர் வருவதைப் பார்த்தவுடன் அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். உடனடியாக சாராய அடுப்புகள் மற்றும் 5 பேரல் சாராய ஊரல் ஆகியவற்றை கைப்பற்றி அங்கேயே அழித்தனர். இதன்மதிப்பு ரூ. ஒரு லட்சம் ஆகும். விசாரணையில் ஜவ்வாதுமலை பால்வாரி கிராமத்தைச்சேர்ந்த சிவபாலனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. வனத்துறையினர் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.