பாட்டிக்கு திதி கொடுத்த மாதிரி பரீட்சை எழுதினோம்!! - டி.என். பி.எஸ்.சி., யில் இப்படியொரு பிரச்சினை


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-4 பணிக்கான தரவரிசைப் பட்டியல் அண்மையில் வெளியான நிலையில் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.


அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 40 பேர் முதல் 100 இடங்களில் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அதிலும் இந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.


நடந்து முடிந்த குருப்-4 தேர்வு முடிவில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான தேர்வாளர்கள் முதல் நூறு இடங்களைப் பிடித்து தேர்வு பெற்றுள்ளனர்.


இந்த தேர்வு முறைகேடாக நடந்துள்ளது. கடுமையான பயிற்சி எடுத்து தேர்வு எழுதியவர்கள் கூட 70 மதிப்பெண் எடுக்க முடியவில்லை. ஆனால், மிக சாதாரணமாக ராமேஸ்வரம், கீழக்கரை போன்ற இடங்களில் தேர்வு எழுதியவர்கள் என்பது முதல் நூறு மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளது என தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்த நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற பெரிய கண்ணனூர் பகுதியை சேர்ந்த நாற்பதுக்கும் அதிகமான தேர்வாளர்களை நேற்று சென்னைக்கு வருமாறு டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். “எப்படி உங்களுக்கு தொடர்பே இல்லாத ராமேஸ்வரம் சென்டரை தேர்வு செய்தீர்கள்...?” என்று அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.


அதில், முப்பதுக்கும் அதிகமானவர்கள் “எங்க தாத்தா, பாட்டிக்கு திதி குடுக்க போகவேண்டியிருந்தது. அதனால் தான் ராமேஸ்வரத்துக்கு போனோம். அங்கேயே தேர்வு எழுதிட்டு, பின்னாலே திதி குடுத்துட்டு ஊருக்குத் திரும்பி வந்தோம்.” என்று அச்சு பிசகாமல் பதில் சொல்லியுள்ளனர். இந்த பதில்தான் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது.


 
இதுகுறித்து பெரிய கண்ணனூர் பகுதியில் தேர்வு எழுதியும் தோல்வி தழுவிய சிலரிடம் விசாரிதோம்.


“இப்போது நடந்துள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளுக்கு மூலகாரணமாக இருந்தவர் ஒரு போலீஸ்காரர். இவருடைய சொந்த ஊர் பெரியகண்ணனூர். இவருடைய அப்பா ஆளும் கட்சியை சேர்ந்தவர். முன்பு காவல் துறை உயர் அதிகாரியாக இருந்து பின்னர் டி.என்.பி.எஸ்.சி-யில் பொறுப்புக்கு வந்த ஒரு அதிகாரிக்கு இவர் கார் ஓட்டியுள்ளார். அதன் பின்னர், சில காலம் வருவாய் துறை அமைச்சருக்கும் இந்த போலீஸ்காரர் கார் ஓட்டியுள்ளார்.


இப்போது, நீதிபதி ஒருவருக்கு கன் மேனாகவும் கார் ஓட்டுனராக இருக்கிறார். இவர் டி.என்.பி.எஸ்.சி தலைவருக்கு கார் ஓட்டிய நேரத்திலேயே தலைவருடன் சேர்ந்து பல குறுக்கு வேலைகளை செய்து பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். இதன் மூலம், டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அதன் பின்னர் அமைச்சருக்கு கார் ஓட்டியபோதும் ஆளும் கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆட்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு டி.என்.பி.எஸ்.சி மூலமாக வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.


இப்போது, சிவகங்கை மாவட்டம், பெரிய கண்ணனூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த 207, பேரிடம் தலா ஆறு லட்சம் வீதம் பணம் வாங்கிக்கொண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கூடுதல் மதிப்பெண் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். ஏற்கனவே குரூப்-1, குரூப்-2 தேர்வுகளிலும் பலருக்கு பணம் வாங்கிக்கொண்டு தேர்வில் வெற்றிபெற வைத்துள்ளார். இப்படி பணம் கொடுத்து வேலை வாங்கியவர்கள் பெரும்பாலும் அதிமுகவினர். அல்லது அதிமுக பிரமுகர்கள் மூலமாக இந்தப் போலீசாரிடம் பணம் கொடுத்தவர்கள் தான்.


முறையாகப் படித்து தேர்வு எழுதிய நாங்கள் எல்லோருமே ஒரு மதிப்பெண். ஒன்னரை மதிப்பெண் குறைவாக வாங்கி வேலை வாய்ப்பை இழந்துள்ளோம்” என்கிறார்கள்.


இந்த போலீஸ்காரருக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைமையகத்தில் இருக்கும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாம்ல இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்காது என்பதால் இந்த கோணத்தில் விசாரணை போகுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. எனவே இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.