பெரம்பலூர்  வட்டாட்சியர்  அலுவலக கட்டுமானப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்!

புதிதாக கட்டப்பட்டு வரும் பெரம்பலூர்  வட்டாட்சியர்  அலுவலக கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் வே.சாந்தா நேரில் பார்வையிட்டார்.பெரம்பலூர்  வட்டாட்சியர்  அலுவலக வளாகத்தில் புதிதாக ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர்  அலவலக கட்டுமானப் பணிகளை, மாவட்ட கலெக்டர் வே.சாந்தா  பார்வையிட்டார்.  அதன்படி, ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் 1252 ச.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய வட்டாட்சியர்  அலுவலக கட்டிடத்தில் தரைதளத்தில் வட்டாட்சியர்  அலுவலகமும், கம்ப்யூட்டர்  அறைகளும், பதிவறைகளும், முதல் தளத்தில் தேர்தல் பிரிவு, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்டவைகளும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  


இவ்வாய்வின்போது, பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டாட்சியர்  அலுவலகத்தின் புதிய கட்டுமானப் பணிகளின் இரு தளங்களையும் பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அங்கு நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.  மேலும் பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசால் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உயரிய தரத்துடன் விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர்  உத்தரவிட்டார்.மேலும், வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு அலுவல் நிமித்தமாக வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காக தேவையான அளவில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தவும், அடிப்படை தேவைகளான கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர்  வசதிகள் உள்ளிட்டவற்றை போதுமான அளவில் ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.  மேலும் புதிய வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் நிழல் தரும் வகையில் அதிகளவில் மரங்களை நடவும், அதன்மூலமாக வட்டாட்சியர் அலுவலகங்கள் இயற்கை எழில் சூழ்ந்த வளாகமாக காட்சி அளிக்கும் என்று தெரிவித்தார். இவ்வாய்வின்போது வருவாய் கோட்டாட்சியர்  சுப்பையா, வட்டாட்சியர் பாரதிவளவன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.