தேசிய அளவில் மூன்றாமிடம்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி கலக்கல்

 


திருப்பூர்:  இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் மந்தமாக இருக்கும் 20 நகரங்களுக்கு வழிகாட்டி, உதவுவதற்காக சிறப்பாக செயல்படும் பிற 20 நகரங்கள் கொண்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி பிரதமரானார். கடந்த 2015-ம் ஆண்டு அழகிய நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின்படி நகர்ப்புறங்களில் உலகத் தரத்துக்கு இணையாக அனைத்து அடிப்படை வசதிகளை உருவாக்குவதுதான் நோக்கம். இதற்காக நாடு முழுவதும் உள்ள 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. வழிகாட்டும் 20 நகரங்கள் பட்டியலில் தமிழகத்திலுள்ள திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் 100 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், இந்த திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தும் நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் 20 நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியும் இடம்பெற்றுள்ளது. அகமதாபாத் முதல் இடத்திலும், நாக்பூர் 2-ம் இடத்திலும், தமிழகத்தின் திருப்பூர் 3-ம் இடத்திலும் உள்ளன. மேலும், ராஞ்சி, போபால்,  சூரத், கான்பூர், இந்தூர், விசாகப்பட்டினம், வேலூர், வடோதரா, நாசிக், ஆக்ரா, வாரணாசி, தாவணகரே, கோட்டா, புனே, உதய்பூர், டேராடூன் மற்றும் அமராவதி ஆகியவை முதல் 20 இடங்களைப் பிடித்த மற்ற நகரங்கள் ஆகும். இதுபோல திட்டத்தை அமல்படுத்துவதில் பின்தங்கிய நிலையில் உள்ள 20 நகரங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன. அதேநேரம், இந்த நகரங்களை மேம்படுத்துவதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் 20/20 திட்டத்தை வகுத்துள்ளது.


இதன்படி, சிறப்பாக செயல்படும் 20 நகரங்களும் தலா ஒரு பின்தங்கிய நகரத்துக்கு வழிகாட்ட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒரே பகுதி மற்றும் கலாச்சார அடிப்படையில் 2 நகரங்கள் இணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, அகமதாபாத் சண்டிகருக்கும், ராஞ்சி சிம்லாவுக்கும், புனே தரம்சாலாவுக்கும், வாரணாசி அமிர்தசரஸ் நகருக்கும் வழிகாட்ட வேண்டும். தொடர்ந்து, விசாகப்பட்டினம் டையு நகருக்கும், சூரத் சஹாரன்பூருக்கும், போபால் அய்சால் நகருக்கும் வழிகாட்ட வேண்டும். இதற்காக வரும் 20-ம் தேதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, 100 நாட்களில் பின்தங்கிய நகரங்களை மேம்படுத்த வேண்டும். இதற்கு தேவையான ஆலோசனைகளை சிறப்பாக செயல்படும் நகரங்கள், வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது....