100 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய இன்பதுரை எம்.எல்.ஏ.,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும்  விதமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக வள்ளியூர் பூங்கா நகரில் உள்ள நரிக்குறவர் காலனியில் உணவின்றி    தவித்த 100  குடும்பங்களுக்கு  ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளருமான இன்பதுரை  அரிசி பைகளை வழங்கினார்.


இதனைத் தொடர்ந்து இன்பதுரை எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில்  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எதிர்க்கட்சிகளிடம்  கருத்து கேட்பு கூட்டமோ ஆலோசனை கூட்டமோ அல்லது அனைத்துக் கட்சி கூட்டமோ நடத்த வேண்டும் என கூறுகிறார்கள்.அது தேவையற்றது.


 ஏனென்றால் சட்டமன்றம் நடக்கும் பொழுது கொரோனா குறித்த விவாதங்கள் அங்கு நடைபெற்றது. அப்பொழுது ஆரம்பம் முதலே சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வந்தன. ஆனால் இப்பொழுது அவர்கள் எங்களை அழைத்து ஆலோசனை கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். 


அப்படி சிறப்பான ஒரு ஆலோசனை எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது என்றால் அதை அவர்கள் இமெயில் மூலமாகவோ கடிதம் மூலமாகவோ முதல்வருக்கு தெரிவிக்கலாம். 


தங்களுக்கு  புகழ் கிடைக்க வேண்டும்  என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. கொரோனா வைரஸ் சீன நாட்டிலிருந்து வந்ததாக பரவலாக கூறப்படுகிறது.எதிர்க்கட்சிகள் தங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று கூறுவதை பார்க்கும் பொழுது எனக்கு ஒரு சீனப் பழமொழி ஞாபகத்திற்கு வருகிறது அது என்னவென்றால், கழுகிடம் வழிகாட்ட சொன்னால் அது செத்த நாய்கள் கிடக்கும் இடத்திற்குதான் நம்மை கொண்டுபோய் விடும் என்பதுதான் அந்தப் பழமொழி.


கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு தேர்ந்த போர் வீரனை போல விவேகத்துடனும் ஒரு நல்ல படைத் தலைவனை போல மதி நுட்பத்துடனும் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.


எனவே மத்திய மாநில அரசுகள் வழிகாட்டுதலின்படி வீடுகளுக்குள் தனித்து இருப்பதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதை வெல்லலாம்.


 தனித்திரு விலகி இரு வீட்டில் இரு விலகி  என்ற தமிழக முதல்வரின் 3 முத்தான அறிவுரைகளை நடைமுறையில் மேற்கொண்டால் கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்றார்.