திருப்பூர் மாநகராட்சியில் 1337 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்! அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஆணையாளர் சிவக்குமார் தகவல்

திருப்பூர் மாநகராட்சியில் 1337 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்; சுகாதாரப்பணிகள் மற்ரும் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்தார்.திருப்பூர் மாநகராட்சியின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை உதவி ஆணையர் சந்தான நாராயணன், மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் தாக்கல் செய்தார். இதில் 1337 கோடி ரூபாய் வருவாய் வரவினம் என்றும், 1048 கோடி வருவாய் செலவினமாக இருக்கும் என்றும் ஆணையர் சிவக்குமார் தெரிவித்தார். மேலும் இந்த பட்ஜெட்டில் 5.36 கோடி உபரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சுகாதார பணிகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்தார். இது குறித்து மேலும் ஆணையாளர் சிவக்குமார் கூறுகையில், ‘திருப்பூருக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும், மேற்கொள்ள பட்ஜெட் திட்டமிடப்பட்டு உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் நான்காவது குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி பணிகள், உள்ளிட்ட திட்டப்பணிகள் அரசு நிதியின் மூலம் நடைபெற்று வருகிறது. பொது நிதி மூலமாக அன்றாட பராமரிப்பு மற்றும் மூலதனப்பணிகள் நடந்து வருகிறது.பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பாக செய்து தர மாநகராட்சி பணியாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.  கோரோனா தடுப்பு என்ற அளவில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம். திருப்பூரில் பெரிய வணிக வளாகங்கள் இல்லை. சிறிய கடைகளுக்கு தேவையான விழிப்புணர்வு அளித்து வருகிறோம். சினிமா தியேட்டர்கள் எல்லா இடங்களிலும் மூடப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் கூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்லப்பட்டு வருகிறது.மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலமாக பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் உள்பட அனைத்து இடங்களிலும் மருத்துவக்குழுக்கள் முகாமிட்டு, சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்கிறார்கள். தமிழ்நாடு அரசின் அறிவுரைகளை மாநகராட்சி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.  திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் கோவில் வழிக்கு கொண்டு செல்லும் பணிகளும், மார்க்கெட் இடம் மாற்றும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரப் பணிகள் நோய்பரவலை தடுக்க தேவையான அளவு முழு வீச்சில் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.