சென்னையில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடி


சென்னை மாவட்ட எல்லைகளாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டுள்ளது.


 அதே நேரத்தில் ஏப்ரல் 14-ந்தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


ஒரு இடத்தில் இருப்பவர்கள் அந்த மாவட்ட எல்லைகளை கடந்து செல்லவும் முடியாது. மற்றவர்கள் அந்த மாவட்டத்துக்குள் நுழையவும் முடியாது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாவட்ட எல்லைகளாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, பழைய மாமல்லபுரம் சாலையில் செம்மஞ்சேரி, ஜி.எஸ்.டி. சாலையில் பீர்க்கங்கரணை இரணி அம்மன் கோவில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை, நெல்லூர் சாலையில் பாடியநல்லூர் எம்.ஏ.நகர், மணலி சாலையில் வெள்ளிவாயல், சி.டி.ஏ. சாலையில் பாக்கம் மற்றும் கொட்டமேடு என சென்னையை சுற்றி 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.


ஒவ்வொரு சோதனை சாவடியிலும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் பணியில் உள்ளனர். முக்கியமான சாலைகளில் உதவி கமி‌ஷனர் தலைமையில் 30 போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.


இந்த சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது.


இந்த சாலைகளை கடந்து யாரும் சென்னை நகருக்குள் நுழைய முடியாது. சென்னையில் இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது. மேலும் சோதனை சாவடிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.


சோதனை சாவடிகளில் யாராவது பிரச்சனை செய்தால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். சோதனை சாவடிகளில் விதிகளை மீறி யாராவது கடந்து சென்றால் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


எனவே போலீசார் கண்டிப்புடன் செயல்படுவார்கள். போலீஸ் உயர் அதிகாரிகள் இந்த தவலை தெரிவித்தனர்.


இதற்கிடையே பொதுமக்கள் வெளியே சென்றால் அரசு வழங்கியுள்ள ஆவணங்களை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்று மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் கூறியுள்ளார்.


அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும் மக்கள் அரசு வழங்கியுள்ள ஆவணங்கள் மற்றும் நிறுவன அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும்.


மருத்துவ கண்காணிப்பு குழு போலீசார் சோதனையில் ஆவணங்களை சமர்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Previous Post Next Post