சித்த மருத்துவமனையில் கபசுரக் குடிநீர் இல்லை: மாஸ்க் அணிந்து திருமணம் செய்து கொண்ட ஜோடி

ஊரடங்கின் ஆறாம் நாளான இன்று திருப்பூரில் பொதுமக்கள் முடங்கி கிடந்தாலும், சாலைகளில் வாகனங்கள் செல்வதை காணமுடிந்தது. போலீசார் சில இடங்களில் மட்டும் வாகன ஓட்டிகளை திரும்ப செல்லக்கூறி எச்சரித்தனர். மற்றபடி வாகனங்கள் சென்று கொண்டு தான் இருந்தன.திருப்பூர் தெற்கு போலீசார் தாராபுரம் ரோட்டில் சென்ற வாகனங்களை எச்சரித்து அனுப்பினர். அவிநாசியில் இருந்து சேவூர் வரை உள்ள மெயின் ரோட்டில்  அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில் போலீசார் ஒரு ஜீப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ரோட்டில் இருந்த காய்கறி கடைகளில் மக்கள் விதிகளை பின்பற்றாமல் இருந்ததை கண்டித்து எச்சரித்தனர். அதேபோல் வரிசையில் இடைவெளி  இல்லாமல் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்களை அழைத்து எச்சரித்தனர். திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரி சித்தா, ஆயுர்வேதா மற்றும் யுனானி பிரிவில், பொதுமக்கள் ஏராளமாக வந்து கபசுர குடிநீர் கேட்டு செல்வதை காணமுடிந்தது. ஆனால் அதற்கு இல்லை என்றே பதிலளித்தனர். பொதுமக்கள் குடிப்பதற்காக நிலவேம்பு கஷாயம் வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்களுக்கு இங்கு கபசுரக்குடிநீர் இலவசமாக தரவேண்டும் என பலர் கூறினர். ஆயுர்வேதா பிரிவில் டாக்டர் விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கும் மேலாக மருந்துகள் வழங்கவில்லை என பொதுமக்கள் புலம்பி சென்றனர். திருப்பூர் மேட்டுப்பாளையம் வெங்கடாச்சலம்  - செந்தமிழ்செல்வி ஆகியோரது மகன் ஸ்ரீகாந்த்துக்கும், சேவூர் அளகாத்திரிபாளையம் கருப்பசாமி - லதாமணி ஆகியோரது மகள் தேன்மொழிக்கும், அவிநாசி கைகாட்டிப்புதூரில் உள்ள சரஸ்வதி மகால் திருமண மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்களது திருமணம் சேவூர் அளகாத்திரிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் மிக எளிமையாக சில உறவினர்களுடன் நடைபெற்றது. மணமக்களும் உறவினர்களும் மாஸ்க் அணிந்து பங்கேற்றனர்.திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் தமுமுகவினர் வீடு வீடாக சென்று காய்கறிகளை இலவசமாக வழங்கினர். தினமும் காய்கறிகள் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம்,சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பாலிக்காடு, சந்தையம்பாளையம் உள்பட 12 வார்டுகளில் கரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவூர் ஊராட்சித் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி தனது சொந்த செலவில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.


 


திருப்பூர்  கொங்கு மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் ரோடுகளில் வேப்பிலை, உப்பு மஞ்சள் நீர் கரைத்து தெளித்தனர்.