வீதிகளில் சுற்றித்திரியும் இளைஞர்கள்- திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உழவர் சந்தை

 

திருப்பூரில் ஊரடங்கின் மூன்றாம் நாளான இன்று பொதுமக்கள் வீடுகளில் தஞ்சமடைந்திருந்தாலும், ஏராளமானோர் வீதிகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர்.
 திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட், பெருமாநல்லூர் ரோடு, கொங்கு மெயின் ரோடுகள், அனுப்பர்பாளையம், புஷ்பா தியேட்டர் பகுதிகளில் ஏராளமான இளைஞர்கள் ரோடுகளில் இரு சக்கர வாகனங்களில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டு சுற்றினர்.

தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம், செல்லாண்டியம்மன் துறை, சுகுமார் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தது.


 இறைச்சிக்கடைகளில் இன்று காலையே பொதுமக்கள் கூட்டம் கூடி இருந்தனர். பெரும்பாலான இறைச்சிக் கடைகள் பொதுமக்களை இடைவெளியில் நிற்க வைக்கவில்லை. இறைச்சிக்கடைக்காரர்களும் முகமூடி அணியாமல் இருந்ததை காண முடிந்தது.


திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் உள்ள உழவர் சந்தையை கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் சிவக்குமார், தாசில்தார் சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 


 திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள உழவர் சந்தை புது பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்கும் ரேக்குகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக மாநகர் நல அலுவலர் பூபதி, உதவி ஆணையர் செல்வநாயகம், உதவி பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் புது பஸ் ஸ்டாண்டில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.

 ரேக்குகளில் காய்கறி கடைகள் செயல்பட ஏதுவாக பொதுமக்கள் நிற்பதற்கு இடைவெளி விட்டு கோடுகள் போடப்பட்டு உள்ளது. நாளை முதல் உழவர் சந்தை புது பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலேயே செயல்படும் என்று தெரிவித்தனர். 


 பொதுமக்கள் அதிகாலையில் சென்றால் காய்கறிகள் வாங்கிக் கொள்ளலாம். 

 திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சிலர் கால்நடையாகவே சொந்த ஊருக்கு கிளம்புகின்றனர்.


திருப்பூர் குமரன் ரோட்டில் ஒரு குடும்பம் ஊத்தங்கரை வரை நடந்து செல்வதாக கூறி மூட்டை முடிச்சுகளை தலைச்சுமையாக ஏற்றிச் சென்றனர். 


 வீடில்லாத பொதுமக்கள், வெளியூர் செல்ல முடியாத வெளியூர்காரர்கள் தங்குவதற்கு சந்திரகாவி பள்ளி, பழனியம்மாள் மாநகராட்சிப்பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு அவ்ர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. 


பாண்டியன் நகர், பூலுவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள் சுற்றித்திரிவதாகவும், அவர்களை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். 


 

 


 


 


 ReplyReply allForward