கோபியில் சாலைகளில் செல்பவர்களை கட்டுப்படுத்த போலீஸ் குவிப்பு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து வாகனங்களில் வருபவர்களை போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். தினசரி மார்க்கெட்டில் வழக்கம் போல் மக்கள் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது.


கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு  முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், மற்ற நேரங்களில் சாலைகளில் செல்பவர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் கோபி பகுதியில் அடிக்கடி வாகனங்களில் வருபவர்களை போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். வாகனங்களில் வருபவர்கள் அனைவருமே மருந்து பொருட்கள் வாங்க செல்வதாக கூறுவதால் போக்குவரத்தை முழுமையாக நிறுத்த முடியாத நிலையில் போலீசார் உள்ளனர். 


இதனால் அடிக்கடி வருபவர்களையும், உரிய மருந்து சீட்டு இல்லாதவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்ய கோபி கோட்டாட்சியர் ஜெயராமன், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து கோபி காவல் துறை ஆய்வாளர் சோமசுந்தரம், போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர்கள்  கிருஷ்ணகுமார், வி.மகேஸ்வரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை முழுமையாக  நிறுத்த குவிக்க பட்டுள்ளனர்.