கட்டணம் வசூலிக்க வழி தேடும் தனியார் பள்ளிகள்...ஆன்லைன் வகுப்புகளால் யாருக்கு பயன்

கொரோனா தொற்றுப் பரவல் எதைஎதையோ சர்வசாதாரணமாக மாற்றி விட்டு செல்கிறது..



வாழ்க்கையின் அடுத்த நிலைக்கான முதல் படிக்கல் என்று சொல்லப்படும் பத்தாம் வகுப்புத்தேர்வையே ரத்து செய்தாகி விட்டது.எல்லோரும் பாஸ் ஆகி விட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது...


ஆனால் தனியார் பள்ளிகள் இன்னமும் ஆன்லைன் வகுப்பெடுப்பதாக தினமும் களேபரம் பண்ணுகிறார்கள்..


ஆன்லைன் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியை ஆங்கிலத்தில் சொல்வதை கேட்டுக் கொண்டு, பெற்றோர்களும் குழந்தைகளை ஸ்மார்ட் போனின் முன்புறமோ.., லேப் டாப் முன்புறமோ கட்டிப்போட்டு விடுகிறார்கள்.


இதற்கென பல பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை குழந்தைகள் வசம் தந்து விட்டு போன் இல்லாமல் வெளியே செல்வதையும் பார்க்க முடிகிறது.


அந்த போன்களில் Parents Control என எதையும் போட்டுத்தொலைக்காமல் அப்படியே தந்து விட்டுப் போகிறார்கள்.(அது பற்றி பல பெற்றோர்களுக்கே தெரியவில்லை, அவர்கள் என்ன செய்வார்கள்?)


ஆன்லைன் வகுப்புகள் முடிந்ததும், Game விளையாடும்போது இடையில் வரும் விளம்பரங்களும், youtube ல் குழந்தைகள் பார்க்கும் போது இடையில் வரும் கண்டகருமங்களும் குழந்தைகள் மனதில் தினமும் நஞ்சை விதைத்துக் கொண்டு இருக்கின்றன.


இரண்டாவதாக ஆன்லைன் பாடங்களில் குழந்தைகளின் புரிதல் எந்தளவுக்கு இருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும்.டீச்சரம்மா ஆங்கிலத்தில் சொல்வதை கோரசாக தப்புத்தப்பாக கத்திக்கொண்டு இருக்கின்றன குழந்தைகள்.குழந்தைகள் பக்கம் Mute செய்து விட்டு ஆசிரியைகள் வெரிகுட் சொல்லிவிட்டு கடந்து சொல்கிறார்கள்.


எதற்காக தனியார் பள்ளிகள் இத்தணை கஷ்டப்பட்டு ஆன்லைன் வகுப்பெடுக்கிறார்கள் என்று கேள்வி பெற்றோர் மனதில் எழுந்தாலும் கேட்க முடியாமல் தவிக்கிறார்கள்...


பல தனியார் பள்ளிகள் பருவக்கட்டணங்களை கட்டச்சொல்லி டார்ச்சர் செய்யத் துவங்கி இருக்கிறார்கள்.


சிலர் எதுவும் சொல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.


இப்போதைய நோய்ப் பரவல் தீவிரத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கூடத் தெரியாத நிலையில், பிரி.கே.ஜி., எல்.கே.ஜி.,க்கு அட்மிஷன் 25 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூல் செய்து கல்லாக்கட்டுகிறார்கள் பல பள்ளிகள்.


பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ததை போல ஆன்லைன் வகுப்புகளையும் முழுமையாக ரத்து செய்வதே நல்லது.


யாருக்கும் எந்த பிரையோஜனமும் இல்லாமல் பள்ளி ஓனர்கள் கட்டிவைத்த கட்டிடங்களுக்கு வாடகை வசூல் செய்ய வாய்ப்பை உருவாக்குவது போல நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புகள் தேவையே இல்லை என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும்.


கொரோனா பரவல் காலம் முடியும் வரை பள்ளி குழந்தைகளுக்கு விடுதலை தர வேண்டும்.


வாழ்வாதாரத்துக்கே வழி இல்லாமல், இயல்பு வாழ்க்கையை தொலைத்து விட்டுத்தவிக்கும் பெற்றோர்களுக்கும் இது பெரும் நிம்மதியை தரும் விஷயமாக இருக்கும்.


பத்தாம் வகுப்புக்கு செய்தது போல, இந்த கல்வி ஆண்டை மாணவர்களுக்கு ஒரு ஆல் பாஸ் அறிவிப்பின் மூலமாக கூட ஈடு கட்ட முடியும்...


-Mani Tirupur



Previous Post Next Post