கூட்டம் இருந்தால்தான் ஆள் வருவாங்களாம்... கொரோனா காலத்தில் இப்படி ஒரு மனப்பிரமை... சமூக இடைவெளி பின்பற்றாத பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

தமிழகம் முழுவதும் கோரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.


வெளியூரில் இருந்து வந்தவர்கள் மூலமாக மட்டும் தற்போது ஒரு சில தொற்றுக்கள் வர ஆரம்பித்துள்ளது. இதன்மூலம் இன்றைய நிலைக்கு 128 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.


இதில் 116 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்ற நிலையில் 11 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக முடுக்கி விட்டு உள்ளது.


இந்நிலையில், திருப்பூரில் உள்ள பேக்கரிகள் சிலவற்றில் சமூக இடைவெளி, சுகாதாரம் பேணுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு நோய் பரப்பும் மையம் போல செயல்படுகின்றன.


குறிப்பாக திருப்பூர் மங்கலம் ரோட்டில் ஏபிடி ரோடு, கார்ணரில் உள்ள அய்யனார் விலாஸ் பேக்கரியில் சமூக இடைவெளி முற்றிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. பொது மக்கள் நெரிசலில் நின்று கொண்டு தின்பண்டங்களை வாங்கி கூட்டம் கூட்டமாக நின்று சாப்பிடுவது தொடர்கதையாக உள்ளது.



  •  இங்கு கைகழுவ வாஷ்பேஸினில் சோப்பு எதுவும் வழங்கப்படுவதில்லை. சானிடைசர் பெயரளவுக்கு வைத்து விட்டு, அதை பொதுமக்கள் பயணபடுதத செய்வதில்லை.


மேலும் அன்றாடம் விற்கப்படும் பலகாரங்களில் பழைய பலகாரங்களை விற்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.


இதுகுறித்து திருப்பூர் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சின்னத்துரையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 


இந்நிலையில் இன்று மாலை அங்கு சென்ற செய்தியாளர்கள் கூட்டம் அதிகம் இருந்ததை படம் பிடிக்கத் தொடங்கினர். 


இதுபற்றிய புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விஜயலலிதாம்பிகை, அந்த பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, ' பேக்கரியில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். ஒரு பக்கம் உள்ளே வந்து இன்னொரு பக்கம் வெளியில் செல்லுமாறு பொது மக்களை அறிவுறுத்த வேண்டும். 


தரையை மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் சுத்தப்படுத்த வேண்டும். கைகளை சுத்தம் செய்ய ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சானிடைசர் வழங்க வேண்டும். 


பேக்கரியில் உள்ள டேபிள்களில் யாரும் கை வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். என்பன உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினார். 


இதேபோல இன்னொரு முறை நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார்.  


இந்த சம்பவத்தால் அந்த பேக்கரி கடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கொரோனா காலத்தில், வியாபாரம் செய்யும் பேக்கரி கடைக்காரர்கள், ஜே ஜே என்று கூட்டம் இருந்தால்தான் தங்கள் கடைகளில் தரமான பொருள் விற்கப்படும் எனக் கருதி பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதற்காக இப்படி கூட்டம் சேர்க்கிறார்கள்.


பொதுமக்களின் நலன் கருதி, நோய் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அதிலும் அதிகம் கூட்டம் சேர்க்கும் கடைகளில் தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றியதாக நினைத்துக்கொண்டு மனப்பிரமையில் இருக்காமல் அரசின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால் மட்டுமே திருப்பூருக்குள் நோய் பரவாமல் தடுக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.


 


 


 


 


 


 


Previous Post Next Post