வைகை அணையின் நீர்மட்டம் 59.51 அடியை எட்டியுள்ள நிலையில், முதல்போக பாசனத்திற்காக திறப்பு

வைகை அணையின் நீர்மட்டம் 59.51 அடியை எட்டியுள்ள நிலையில், முதல்போக பாசனத்திற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீர் திறந்து வைத்தார்.

 


 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகர குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வைகை அணையின் நீர்மட்டம் உயரவில்லை.

இதற்கிடையே இந்த மாதத்தின் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

 

இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாகவும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

 

கடந்த 5-ந்தேதி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 30 அடி மட்டுமே இருந்தது. தொடர் மழை மற்றும் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 59.51அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 22 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 28 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு வினாடிக்கு 1,357 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

 


 

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதியின் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

 

அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சி யில் பூஜைகளுக்குப் பின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வைகை அணையில் இருந்து நீர் திறந்து வைத்தார். 

 

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் RB.உதயகுமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து விடப்பட்ட நீருக்கு மலர்த் தூவி வரவேற்றனர்.

 

வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் இருப்பை பொறுத்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

 

மதுரை, மற்றும் தேனி ஆட்சியர்கள், வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்